உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் இத்தாலி, பிரேசில் அணிகள் மட்டுமே தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இத்தாலி 1934, 1938 ஆகிய ஆண்டுகளிலும், பிரேசில் 1958, 1962 ஆகிய ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக உலக கோப்பையை வென்றன.
இந்த வரிசையில் அர்ஜென்டினா இணையுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. மெஸ்சி தலைமையில் அர்ஜென்டினா 2022-ல் கத்தாரில் நடந்த போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
இதற்கு முன்பு மரடோனா இந்த சாதனையை தவறவிட்டார். 1986-ல் அவர் அர்ஜென்டினாவுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்தார். அதற்கு அடுத்த (1990) உலக கோப்பை இறுதிப் போட்டிக்கும் அர்ஜென்டினா முன்னேறியது. ஆனால் இறுதி ஆட்டத்தில் மரடோனா அணி 0-1 என்ற கணக்கில் மேற்கு ஜெர்மனியிடம் தோற்றது.
தற்போது மெஸ்சி தொடர்ச்சியாக 2 முறை உலக கோப்பையை வென்று சாதிப்பாரா? அல்லது ஸ்பெயின் அந்த சாதனையை தடுக்குமா? என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
இதற்கு முன்பு பிரான்ஸ் தொடர்ச்சியாக 2 முறை சாம்பியன் ஆகும் கனவை அர்ஜென்டினா தகர்த்தது. 2018-ல் உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் 2022 இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவிடம் தோற்றது. கடந்த காலங்களில் பிரேசில் மீண்டும் தொடர்ச்சியாக உலக கோப்பையை வெல்லும் சாதனையை பிரான்ஸ் தகர்த்தது. 1994-ல் உலக கோப்பையை வென்ற பிரேசில் 1998-ம் ஆண்டு இறுதிப் போட்டியில் பிரான்சிடம் தோல்வியை தழுவியது.
அர்ஜென்டினா அணியின் கேப்டனான லியோனல் மெஸ்சி இறுதிப் போட்டியில் விளையாடுவதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைக்கிறார். அவர் 3-வது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறார். இதன் மூலம் இறுதிப் போட்டியில் 3-வது முறையாக விளையாடும் வீரர் என்ற சாதனை படைக்கிறார். இதற்கு முன்பு 2014, 2022-ம் ஆண்டுகளில் இறுதி போட்டியில் ஆடினார்.
இதில் 2014-ல் தோற்று சாம்பியன் பட்டத்தை இழந்தார். 2022-ல் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார். பிரேசிலை சேர்ந்த கபு 3 உலக கோப்பை இறுதிபோட்டியில் (1994, 1998, 2002) விளையாடி இருந்தார். அவரை மெஸ்சி சமன் செய்கிறார்.
மேலும் அதிக வயதில் (39 வயது 25 நாட்கள்) இறுதிப் போட்டியில் விளையாடும் வீரர் என்ற பெருமையை மெஸ்சி பெறுகிறார். இதற்கு முன்பு இத்தாலி கோல் கீப்பர் டினோ ஷோப் அதிக வயதில் (40 வயதில் 133 நாட்கள்) இறுதி போட்டியில் ஆடி இருந்தார். 1982-ம் ஆண்டு மேற்கு ஜெர்மனிக்கு எதிராக அவர் இடம் பெற்றார். வீரர்களை பொறுத்தவரை மெஸ்சிதான் அதிக வயதில் இறுதிப்போட்டியில் ஆட இருப்பவர் என்ற சாதனையை படைக்கிறார்.