உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. முதல் முறையாக இந்த உலக கோப்பையில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இதற்கு முன்பு 32 அணிகள்தான் விளையாடின. தற்போது 16 நாடுகள் கூடுதலாக இடம் பெற்றுள்ளன.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக வாய்ப்பை பெற்றன. மற்ற 45 அணிகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். தகுதி சுற்று மூலம் 39 நாடுகள் ஏற்கனவே நுழைந்து இருந்தன. எஞ்சிய 6 அணிகள் தகுதி பெறுவதற்கான பிளே ஆப் சுற்று நடைபெற்றது. நேற்றுடன் இந்த போட்டிகள் முடிந்தது.
4 முறை (1934, 1938, 1982, 2006) உலக கோப்பையை வென்ற இத்தாலி மீண்டும் தகுதி பெறவில்லை. போஸ்னியா அண்டு ஹெர்சகோவினாவுக்கு எதிராக ஜென்சிகா நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. இதனால் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு இத்தாலி தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை இருந்தது. இதைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் இத்தாலி 1-4 என்ற கோல் கணக்கில் தோற்றது. தொடர்ந்து 3-வது முறையாக அந்த அணி தகுதி பெறவில்லை. 2018, 2022 ஆகிய ஆண்டுகளிலும் இத்தாலி வாய்ப்பை இழந்து இருந்தது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
போஸ்னியா அணி 2-வது முறையாக தகுதி பெற்று இதற்கு முன்பு 2014-ல் வாய்ப்பை பெற்று இருந்தது. இதேபோன்று சுவீடன், செக்குடியரசு, துருக்கி, காங்கோ, ஈராக் ஆகியவை தகுதி பெற்றன. சுவீடன் 12-வது தடவையாகவும், துருக்கி 4-வது முறையாகவும், செக்குடியரசு 10-வது தடவையாகவும், காங்கோ, ஈராக் 2-வது முறையாகவும் வாய்ப்பை பெற்றன.