கால்பந்து

FIFA World Cup: சமனில் முடிந்த ஆட்டம்.. பதற்றத்துக்கு மத்தியில் அமெரிக்காவில் விளையாடிய ஈரான் கால்பந்து அணி!

சுமார் 500 பேர் வரையிலான ஈரானிய எதிர்ப்பாளர்கள் திரண்டு, ஈரான் அரசுக்கு எதிரான பேனர்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள சோபி மைதானத்தில் நடந்த குரூப் G லீக் ஆட்டத்தில் ஈரான், நியூசிலாந்து அணிகள் மோதின.

ஆட்டம்

ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே நியூசிலாந்து வீரர் எலிஜா ஜஸ்ட் கோல் அடித்தார். எனவே நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் 32வது நிமிடத்தில் ஈரானின் ரமின் ரெசையான் மூலம் ஒரு கோல் சேர போட்டி 1-1 என்று சமன்பட்டது.

நியூசிலாந்த்தின் 2வது கோல் ஆட்டத்தின் 54வது நிமிடத்தில் மீண்டும் எலிஜா ஜஸ்ட் மூலமே சாத்தியபட்டது. எனவே 2-1 என முன்னிலையை நியூசிலாந்து எட்டியது.

ஆனால் அடுத்த 10 நிமிடங்களில் அதாவது ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் ஈரானின் முகமது மொஹெபி கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.

அதன் பின் இரு அணிகளும் கோல் அடிக்க முடியாமல் போகவே ஆட்டம் டிராவில் முடிந்தது.

அடுத்த ஆட்டம்

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் எகிப்து அணிகளும் 1-1 என டிரா செய்தது.

அடுத்த ஆட்டத்தில் ஈரான் அணி பெல்ஜியத்தையும், நியூசிலாந்து அணி எகிப்தையும் எதிர்கொள்ள உள்ளன.

பதற்றம்

ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நீண்ட இழுபறிக்கு பின் முடிவுக்கு வரும் தருவாயில் அமெரிக்காவில் ஈரான் அணி ஆடிய இந்த ஆட்டம் சற்று பதற்றத்துடனேயே பார்க்கப்பட்டது.

ஈரானிய வம்சாவளியினர் அதிகம் வாழும் பகுதி லாஸ் ஏஞ்சலஸ் ஆகும். இதனால், மைதானத்திற்கு வந்திருந்த ஈரான் அணி ரசிகர்களுடன் ஏனையோர் பிரச்சனை செய்யக்கூடும் என அச்சம் நிலவியது.

மைதானத்திற்கு வெளியே சுமார் 500 பேர் வரையிலான ஈரான் எதிர்ப்பாளர்கள் திரண்டு, ஈரான் அரசுக்கு எதிரான பேனர்களை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.