உலக கோப்பை கால்பந்து போட்டி. ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. முதல் முறையாக 48 அணிகள் இந்தப்போட்டியில் பங்கேற்கின்றன.
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான போர்ச்சுகல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 26 பேர் கொண்ட இந்த அணியில் உலகின் சிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றுள்ளார். 41 வயதான அவர் போர்ச்சுக்கல் அணிக்கு கேப்டனாக செயல்படுவார்.
ரொனால்டோ 6-வது முறையாக உலக கோப்பை போட்டியில் விளையாட உள்ளார். இதற்கு முன்பு 2006, 2010, 2014, 2018, 2022 ஆகிய 5 உலக கோப்பையில் ஆடி இருந்தார். இதில் அதிகபட்சமாக 2006-ல் 4-வது இடத்தை போர்ச்சுகல் அணி பிடித்தது. கடந்த உலக கோப்பையில் போர்ச்சுகல் கால்இறுதி வரை வந்து 8-வது இடத்தை பிடித்தார்.
6-வது உலக கோப்பையில் விளையாடுவதன் மூலம் முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைப்பார். லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா) உள்பட 5 வீரர்கள் 5 உலக கோப்பையில் ஆடி உள்ளனர்.
மெஸ்சி இந்த உலக கோப்பை அணியில் இடம் பெற்றால் அவருக்கு இது 6-வது உலக கோப்பையாக இருக்கும். அர்ஜென்டினா அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.