பிபா உலக கோப்பையை கைப்பற்ற நடப்பு சாம்பியன் அர்ஜென்–டினா- ஸ்பெயின் அணிகள் இந்திய நேரப்படி நாளை நள்ளிரவு (12.30 மணி) பலப்பரீட்சை நடத்துகின்றன.
உலக கோப்பையை வெல்லும் அணிக்கு முதல் முறையாக சிறப்பு மோதிரங்களை வழங்க சர்வதேச கால்பந்து சம்மேளனம் திட்டமிட்டுள்ளது. வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கப்பதக்கமும், வெற்றி அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு மோதிரங்களும் வழங்கப்படுகிறது.
96 ஆண்டுகளில் முதல் முறையாக உலக கோப்பை வெற்றியாளர்களுக்கு சிறப்பு மோதிரங்கள் அளிக்கப்படுகிறது.
சாம்பியன் அணிக்கு மோதிரங்கள் வழங்கும் வழக்கம் 19-ம் ஆண்டு நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தே வடஅமெரிக்க விளையாட்டுத் துறையில் இருந்து வருகிறது. உலகின் மற்ற பகுதிகளில் இந்த நடைமுறை இல்லை.
அமெரிக்காவில் உலக கோப்பை போட்டி நடைபெறுவதால் சர்வதேச கால்பந்து சம்மேளனம் இந்த பாரம்பரியத்தை அங்கீகரித்துள்ளது. வெற்றி பெறும் அணிக்கு 30 பிரத்யேக மோதிரங்கள் வழங்கப்படும்.
இந்த மோதிரத்தின் ஒரு பக்கத்தில் உலக கோப்பை உருவம் இடம்பெறும். மறுப்பக்கத்தில் வெற்றி பெறும் அணியின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளம் தெரிவித்துள்ளது.
இந்த மோதிரங்களின் விலை எவ்வளவு என்பது குறித்து பிபா (சர்வதேச கால்பந்து சம்மேளம்) தெரிவிக்கவில்லை.
சாம்பியன்ஷிப் மோதிரங்களை வழங்கும் பழக்கம் 1893-ம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருப்பதாக கருதப்படுகிறது.
உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.477 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும். இந்த பரிசுத் தொகையை நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா கைப்பற்றப் போகிறதா? அல்லது ஸ்பெயின் அணிக்கு கிடைக்குமா? என்று உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ. 314 கோடி கிடைக்கும். 3-வது இடத்திற்கு ரூ.276 கோடியும், 4-வது இடத்திற்கு ரூ.257 கோடியும் வழங்கப்படும். வெண்கலப்பதக்கமான 3-வது இடத்துக்கான போட்டியில் 2 முறை சாம்பியனான பிரான்ஸ்- 1966-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.30 மணிக்கு தொடங்குகிறது.