விளையாட்டு

இன்னும் சற்று நேரத்தில்.. பாக்- வங்காளதேசம் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

கடந்த முறை கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டும்.

ஷான் மசூத் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

பாகிஸ்தான் அணியில் கேப்டன் ஷான் மசூத், பாபர் அசாம், முகமது ரிஸ்வான், சல்மான் ஆஹா, ஷகீன் ஷா அப்ரிடி, சஜித் கான் உள்பட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதேபோல் நஜ்முல் ஹூசைன் ஷன்டோ தலைமையிலான வங்காளதேச அணியில் முஷ்பிகும் ரஹிம், லிட்டான் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது உள்ளிட்ட சிறந்த வீரர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் முதல் 6 தொடர்களை பாகிஸ்தான் அணி வென்றது. கடைசியாக 2024-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் வங்காளதேச அணி, பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி (2-0) முதல்முறையாக தொடரை கைப்பற்றியது.

இதனால் வங்காளதேச அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அத்துடன் உள்ளூர் சூழலும் அந்த அணிக்கு அனுகூலமாக இருக்கும். கடந்த முறை கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டும்.

இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்க கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டம் விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.