இங்கிலாந்து மல்யுத்த வீரரும், 'PAC' எனப் பரவலாக அறியப்பட்டவருமான பெஞ்சமின் சாட்டர்லி காலமானார். அவருக்கு வயது 40.
அமெரிக்காவின் இல்லினாய்ஸின் டெஸ் ப்ளைன்ஸில் உள்ள உணவக வாகன நிறுத்துமிடத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் ஒரு வாகனத்திற்குள் சாட்டர்லி சுயநினைவின்றி காணப்பட்டார்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, சாட்டர்லி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவர் இரத்த உறைவு அல்லது மூளை இரத்தக் குழாய் வீக்கத்தால் இறந்ததாகச் சில பதிவுகள் கூறின.
அவர் பணியாற்றிய ஆல் எலைட் மல்யுத்த அமைப்பு (AEW) நிறுவனமோ அல்லது சாட்டர்லியின் குடும்பத்தினரோ மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணத்தை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.
முன்னதாக சனிக்கிழமை இரவு சிகாகோவில் உள்ள நவ் அரீனாவில் நடைபெற்ற ஆல் அவுட் பே பெர் வியூவில் போட்டியிட்ட பிறகு, சாட்டர்லி இல்லினாய்ஸில் இருந்தார்.
அன்றிரவு நடந்த போட்டியில் சாட்டர்லி, ஆண்ட்ரே எல் இடோலோவை எதிர்கொண்டு தோல்வியடைந்தார்.
ஆல் எலைட் மல்யுத்த அமைப்பு (AEW) சாட்டர்லிக்கு சமூக ஊடகப் பதிவு மூலம் புகழஞ்சலி செலுத்தியது.
"பெஞ்சமின் சாட்டர்லி, என்றழைக்கப்படும் PAC-கின் மறைவை ஆல் எலைட் மல்யுத்தம் வருத்தத்துடன் அறிவிக்கிறது.
இங்கிலாந்தின் நியூகாசில் அப்பான் டைன் நகரைச் சேர்ந்த சாட்டர்லி, 2004ல் தனது மல்யுத்த வாழ்க்கையைத் தொடங்கி, உலகம் முழுவதும் உள்ள மல்யுத்த அமைப்புகளுக்காக போட்டியிட்டு, தனது புதுமையான சாகசங்கள் மற்றும் அபாரமான திறமையால் ரசிகர்களைக் கவர்ந்தார்.
PAC, 2019ல் ஆல் எலைட் மல்யுத்தத்துடன் ஒப்பந்தம் செய்து, பல AEW சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றார். மேலும், AEW வரலாற்றில் மறக்க முடியாத சில போட்டிகளிலும் அவர் பங்கேற்றார்.
சாட்டர்லியின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று AEW தெரிவித்துள்ளது.
சாட்டர்லியின் மரணச் செய்தி, மல்யுத்த உலகம் முழுவதிலிருந்தும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சக மல்யுத்த வீரரான வில் ஆஸ்ப்ரே, அவரை ஒரு மிகச்சிறந்த ஆட்டக்காரராகவும் நெருங்கிய நண்பராகவும் நினைவுகூர்ந்தார்.
"உங்களுடன் பலமுறை மோதும் வாய்ப்பைப் பெற்றதில் பெருமை கொள்கிறேன். நீங்கள் உண்மையிலேயே எனக்கும் மற்றும் பலருக்கும் ஒரு மாபெரும் நாயகன்." என்று ஆஸ்ப்ரே எக்ஸ்-இல் எழுதினார்.
WWEயில் சாட்டர்லி பணியாற்றிய காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியவரும், WWEயின் தலைமை அதிகாரியுமான டிரிபிள் எச் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
அவர் எக்ஸ் தளத்தில் எழுதியதாவது, "WWEல் நெவில் என்று அறியப்பட்ட பென் சாட்டர்லியின் மரணச் செய்தியைக் கேட்டு வருத்தமடைந்தேன்.
அவர் ஒரு அசாதாரண திறமையாளர், அதைவிட அன்பான மனிதர். உலகெங்கிலும் உள்ள அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன." என தெரிவித்துள்ளார்.