வீடியோ கேம்களும் முறையான விளையாட்டு தான் என அனைவரும் ஏற்றுக்கொள்ளும் காலம் மெல்ல உருவாகி வருகிறது.
Esports என அழைக்கப்படும் இவற்றுக்கு முறையான தளமும் உருவாக்கம் கண்டு வருகிறது.
இதில் குறிப்பாக இவ்வாறான வீரர்களுக்கு வாய்ப்பளிக்க உருவான மிகப்பெரும் களம் தான் Esports உலகக்கோப்பை.
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் விளையாட்டுத் திருவிழாவாக இத்தொடர் பரிணமித்துள்ளது.
இதன் முதலாவது சர்வதேச தொடர் நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள Paris Expo Porte de Versailles வளாகத்தில் கோலாகலமாக தொடங்கியது.
ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை மொத்தம் 7 வாரங்களுக்கு இந்தத் தொடர் நடைபெறவுள்து.
இந்த தொடரில் உலக சாதனையாக 75 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.716 கோடி) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட Elite வீரர்கள் மற்றும் 200 முன்னணி Esports கிளப்புகள் இதில் பங்கேற்கின்றனர்.
உலகின் மிகவும் பிரபலமான 24 ஆன்லைன் கேம்களை உள்ளடக்கி மொத்தம் 25 தொடர்களாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஏற்கனவே 1.5 மில்லியனுக்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்ற 330 தகுதிச்சுற்றுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வென்றவர்கள் தற்போது பாரிஸுக்கு நேரில் வந்து தொடரின் அடுத்தகட்ட போட்டிகளில் பங்கேற்கின்றனர்.
இந்த Esports தொடருக்கு கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் செஸ் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஈஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பையின் மிக முக்கிய அம்சமாக 'கிளப் சாம்பியன்ஷிப்' விளங்குகிறது.
ஒவ்வொரு கிளப்பும் பல வீரர்களை கொண்டுள்ளது.
விளையாட்டுகளில் ஒட்டுமொத்தமாக அதிக வெற்றிகளை ஈட்டிய வீரர்களை கொண்ட கிளப்பிற்கு சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படுகிறது.
மொத்த பரிசுத்தொகையான ரூ.716 கோடியில் சுமார் ரூ.286 கோடி இந்த கிளப் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முன்னிலை பெறும் கிளப்புகளுக்கு வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது.