விளையாட்டு

8 அணிகள் பங்கேற்கும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி- நாளை முதல் தொடக்கம்

தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என். பி.எல். ( தமிழ்நாடு பிரீ மியர் லீக்) போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதுவரை 9 போட்டி தொடர் நடைபெற்றுள்ளது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதிகபட்சமாக 4 முறை (2017, 2019, 2021, 2022) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கோவை கிங்ஸ் 2 தடவையும் (2022, 2023), டூட்டி பேட்ரியாட்ஸ் (2016), மதுரை பாந்தர்ஸ் (2018), திண்டுக்கல் டிராகன்ஸ் (2024), திருப்பூர் தமிழன்ஸ் (2025) ஆகியவை தலா ஒரு முறையும் கோப்பையை வென்று உள்ளன.

டி.என்.பி.எல். போட்டி நாளை தொடக்கம்

10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை (4-ந்தேதி) தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை 2 கட்டமாக இந்த போட்டி நடத்தப்படுகிறது.

முதல் கட்ட போட்டிகள் நாளை முதல் 15-ந்தேதி வரை திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், இறுதிப்போட்டி உள்ளிட்ட 2-வது கட்ட ஆட்டங்கள் 18-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடக்கிறது.

8 அணிகள்

இதில் 4 முறை டி.என்.பி.எல். கோப்பையை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நடப்பு சாம்பியன் திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் , நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ்

ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி கள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

மொத்தம் உள்ள 32 ஆட்டங்களில் திண்டுக்கல்லில் 20 போட்டிகளும், சென்னையில் 12 ஆட்டங்களும் நடக்கிறது. 16 மற்றும் 17- ந் தேதி ஓய்வு தினமாகும்.

22-ந் தேதியுடன் லீக் சுற்று முடிவடைகிறது. குவாலி பையர்-1 போட்டி 23-ந் தேதியும், எலிமினேட்டர் ஆட்டம் 24-ந் தேதியும், குவாலிபையர்-2 போட்டி 26-ந்தேதியும், இறுதிப் போட்டி 28-ந்தேதியும் நடக்கிறது.

திருப்பூர்-திண்டுக்கல்

நாளை (செவ்வாய்கிழமை) நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ்- திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன. வெற்றியுடன் தொடங்கப் போவது யார் ? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி சோனி டென் 4 தமிழ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இதேபோல யூடியூபிலும் டி.என்.பி.எல். போட்டியை காணலாம்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் போட்டியில் நெல்லை ராயல் கிங்சை 5-ந்தேதி (இரவு 7.30) எதிர்கொள்கிறது.

அன்று முன்னதாக மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.