விளையாட்டு

இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தல்: எதிர் தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்- பி.டி.உஷாவுக்கு நிவாரணம்

ஐஸ் ஹாக்கி சங்கத்திற்குள் நிலவும் உட்கட்சிப் பூசலும், பரிந்துரைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்ற முரண்பாடும் இந்த வழக்கில் பிரதிபலித்தன.

இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷாவின் பெயர் சேர்க்கப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுவைத் டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகத் தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்க முயன்று வரும் பி.டி.உஷாவுக்கு இருந்த சட்டத் தடை விலகி, அவருக்குப் பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது.

சிறப்புத் தகுதி பெற்ற விளையாட்டு வீரர்கள் பிரிவில் நான்கு பெண் பிரதிநிதிகளுக்கான இடத்தில் போட்டியிட்டு பி.டி. உஷாவால் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து, குர்பிரீத் சிங் பக்ஷி தலைமையிலான இந்திய ஐஸ் ஹாக்கி சங்கத்தின் ஒரு தரப்பினர், பொதுக்குழுவிற்கான தங்களது பிரதிநிதியாக பி.டி.உஷாவை முன்மொழிந்தனர். ஆனால், அந்தச் சங்கத்தில் பி.டி. உஷா உறுப்பினர் அல்ல என்பதால் பிரதிநிதியாகப் பரிந்துரைக்கப்பட முடியாது எனக் கூறி, எதிர் தரப்பைச் சேர்ந்த குன்சாங் நம்க்கியால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஐஸ் ஹாக்கி சங்கத்திற்குள் நிலவும் உட்கட்சிப் பூசலும், பரிந்துரைக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்ற முரண்பாடும் இந்த வழக்கில் பிரதிபலித்தன.

விதிமுறை விளக்கம்

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு முன்னதாக, கடந்த நவம்பர் 15-ஆம் தேதி இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் அதிகாரியும் பி.டி.உஷாவின் தகுதிக்கு எதிரான ஆட்சேபனைகளை நிராகரித்திருந்தார். ஐஸ் ஹாக்கி சங்கத்தின் ஒரு தரப்பினரும், முன்னாள் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ராவும் எழுப்பிய ஆட்சேபனைகளைப் பரிசீலித்த தேர்தல் அதிகாரி, வேறொரு விளையாட்டுச் சங்கத்துடன் தொடர்பில் இருப்பதால் மட்டுமே ஒருவர் தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பின் பிரதிநிதியாகப் போட்டியிடத் தகுதியற்றவராகி விட மாட்டார் எனத் தெளிவுபடுத்தினார்.

இந்திய ஒலிம்பிக் சங்க விதிகளிலோ அல்லது 2025 தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டத்திலோ அத்தகைய தானியங்கித் தகுதி நீக்க விதி இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நவம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, பி.டி. உஷாவும் ஹர்ஜிந்தர் சிங்கும் செயலில் உள்ள உறுப்பினர்கள் என்பதை ஐஸ் ஹாக்கி சங்கப் பிரதிநிதிகள் ஹர்ஜிந்தர் சிங் மற்றும் ஸ்ரீனிவாஸ் கோட்னி ஆகியோர் உறுதிப்படுத்தி, பிரமாணப் பத்திரம் மற்றும் ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். இதையடுத்தே இறுதி வாக்காளர் பட்டியலில் பி.டி.உஷாவின் பெயர் சேர்க்கப்பட்டது.

இறுதி வாக்காளர் பட்டியல்

தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகள வீரர்கள் ஆணையப் பிரதிநிதிகள் என மொத்தம் 71 உறுப்பினர்களைக் கொண்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அஞ்சு பாபி ஜார்ஜ், சாய்னா நேவால், ககன் நரங், ராணி ராம்பால், யோகேஷ்வர் தத், விஜேந்தர் சிங், மீராபாய் சானு, சஜன் பிரகாஷ் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் இந்திய உறுப்பினர் நீட்டா அம்பானி உள்ளிட்ட பல முக்கிய விளையாட்டு ஆளுமைகளும் இடம்பெற்றுள்ளனர்.

தலைவர், மூத்த துணைத் தலைவர், இரண்டு துணைத் தலைவர்கள், பொருளாளர், இரண்டு இணைச் செயலாளர்கள் மற்றும் ஆறு செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நவம்பர் 22 முதல் 24 வரை காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை டெல்லியில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் நேரடியாக நடைபெறுகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் டிசம்பர் 3-ஆம் தேதியும், வாக்குப்பதிவு டிசம்பர் 5-ஆம் தேதியும் நடைபெற உள்ளன.

SCROLL FOR NEXT