2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் 5ஆம் நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் 3 உலக சாதனைகளை முறியடித்துள்ளனர்.
2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் அயிச்சி நகோயா நகரில் கடந்த 18 ஆம் தேதி முதல் நடந்து வருகின்றன. வரும் 24ஆம் தேதி வரை பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இன்று தொடங்கிய 5ஆம் நாள் ஆட்ட தொடக்கத்தில் வெவ்வேறு பிரிவுகளில் இந்தியாவுக்கு தங்கமும் வெள்ளியும் வாய்த்துள்ளது.
இதனிடையே இன்றைய ஆட்டத்தில் தொடக்கத்திலேயே மூன்று உலக சாதனைகளை இந்திய வீரர் வீராங்கனைகள் தகர்த்துள்ளனர்.
பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் SH1 பிரிவில் மோனா அகர்வால் தங்கப் பதக்கம் வென்றார். 357.5 புள்ளிகள் எடுத்த மோனா அகர்வால் சீனாவின் குயிப்பிங் ஜாங்கை 3.8 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.
மோனா அகர்வால் எடுத்த 357.5 புள்ளிகள் என்பது புதிய உலக சாதனை ஆகும். அதேநேரம் நடப்பு தொடரில் மோனா அகர்வால் பெறும் இரண்டாவது தங்கப் பதக்கம் இதுவாகும். ஏற்கனவே மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 பிரிவில் அவர் தங்கம் வென்றிருந்தார்.
மறுபுறம் தடகளப் போட்டிகளில், ஆடவர் 400 மீட்டர் T64 ஒட்டப் பந்தைய இறுதிப் போட்டியில் சந்தீப் குமார் 52.28 வினாடிகளில் மின்னல் வேகத்தில் ஓடி வெற்றி பெற்று தங்கம் வென்றதுடன் சவூதி அரேபியாவின் முன்னாள் சாதனையாளரான நூர் அல்சானாவை பின்னுக்குத் தள்ளி T44 இல் புதிய உலக சாதனையையும் படைத்தார்.
மற்றொரு இந்திய ஓட்டப்பந்தய வீரரான அஜய் குமார் 53.61 வினாடிகளில் இலக்கை கடந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்தியாவின் பாரா வீரர் ஹேனி, ஆடவர் ஈட்டி எறிதல் F37 பிரிவில் தனது இறுதி முயற்சியில் 60.49 மீட்டர் தூரம் எறிந்து உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இது பாரா விளையாட்டுப் போட்டிகளில் அவரது இரண்டாவது பதக்கம் ஆகும். முன்னதாக வட்டு எறிதலில் அவர் வென்ற வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் 400 மீட்டர் T44 இறுதிப் போட்டியில் சந்தீப் குமார் தங்கம் மற்றும் அஜய் குமார் வெண்கலம் வென்றதன் மூலம், 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அதிகாரப்பூர்வமாக 100 பதக்கங்கள் என்ற மைல்கல்லைத் தாண்டியுள்ளது.
முன்னதாக இன்றைய அட்டா தொடக்கத்தில் ஆடவர் ஒற்றையர் SL3 பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் நிதேஷ் குமார், பிரமோத் பகத்தை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். பிரமோத் பகத் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
அதே நேரத்தில், வில்வித்தை ஆடவர் ரிகர்வ் குழுப் போட்டியில் ஹர்விந்தர் சிங் மற்றும் விஜய் சுண்டி ஆகியோர் சீனாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றனர்.
இன்றைய ஆட்டங்களில் பெற்ற பதக்கங்களுடன் சேர்த்து இந்தியா 100 பதக்கங்களை கடந்துள்ளது.