இந்தியா ஏ- இலங்கை ஏ இந்தியா ஏ- இலங்கை ஏ
கிரிக்கெட்

'டை' ஆன இந்தியா ஏ- இலங்கை ஏ இடையிலான போட்டி: சூப்பர் ஓவரில் இலங்கை வெற்றி

கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், 4 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் போட்டி `டை'யில் முடிவடைந்தது.

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது.

இன்று இந்தியா ஏ- இலங்கை ஏ இடையிலான போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா ஏ அணி 49.2 ஓவரில் 265 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. சூர்யான்ஷ் ஷெட்ஜ் 72 ரன்களும், விப்ராஜ் நிகம் 51 ரன்களும் அடித்தனர். இலங்கை ஏ அணி சார்பில் முகமது சிராஸ், விஜயகாந்த் வியாஸ்காந்த் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் 266 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை ஏ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் டிக்வெல்லா 37 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

சதீரா சமரவிக்ரமான சிறப்பாக விளையாடினார். அவர் 80 ரன்களை கடந்து விளையாடினார். இவர் களத்தில் நிற்கும் வரை இலங்கை ஏ அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. 49 ஓவர் முடிவில் இலங்கை ஏ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்திருந்தது.

கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் சமரவிக்ரமாக ரன் அடிக்கவில்லை. 2-வது பந்தில் அர்ஷத் கான் பந்தில் க்ளீன் போல்டாகி 93 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி 4 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த 3 பந்துகளில் தலா ஒரு ரன் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தில் இரண்டு ரன்களுக்கு ஓட முயன்றபோது, இலங்கை வீரர் குணசேகரா ரன்அவுட் ஆனார். இதனால் இலங்கை அணியும் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. இதனால் போட்டி டையில் முடிந்தது.

இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இலங்கை முதலில் பேட்டிங் செய்து 16 ரன்கள் எடுத்தது. பின்னர் 17 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியால் 9 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இலங்கை வெற்றி பெற்றது.