கிரிக்கெட்

முத்தரப்பு டி20 தொடர்: நமீபியாவை எளிதில் வீழ்த்தியது ஜிம்பாப்வே

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் தலா 2 வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்றுள்ளன.

நமீபியா அணிக்கு எதிரான முத்தரப்பு டி20 தொடர் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி எளிதில் வெற்றி பெற்றது.

நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

முதல் லீக் போட்டியில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை நமீபியாவும், 2வது லீக் போட்டியில் ஜிம்பாப்வே அணியை தென் ஆப்பிரிக்காவும் வீழ்த்தியது. 3-வது லீக் ஆட்டத்தில் நமீபியாவை ஜிம்பாப்வே அணியும் வீழ்த்தின. 4வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை தென் ஆப்பிரிக்கா அணியும் வீழ்த்தியது.

நமீபியா-ஜிம்பாப்வே

இந்நிலையில், நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் நமீபியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பவுலிங் தேர்வு செய்தது.

நமீபியா 156 ரன்கள்

அதன்படி, முதலில் பேட் செய்த நமீபியா அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கெர்ஹார்ட் ஹெராமஸ் 48 பந்தில் 88 ரன்கள் குவித்தார்.

ஜிம்பாப்வே சார்பில் பிராட் இவான்ஸ், மடிகிமு தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இன்னசண்ட் காலா அரை சதம்

இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. பிரியன் பென்னட் 22 ரன்னில் அவுட்டானார்.

இன்னசண்ட் காலா-சிக்கந்தர் ராசா ஜோடி பொறுப்புடன் ஆடி 54 ரன் சேர்த்தது. சிக்கந்தர் ராசா 29 ரன் எடுத்தார்.

பொறுப்புடன் ஆடிய இன்னசண்ட் காலா 42 பந்தில் 72 ரன் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதன்மூலம் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் தலா 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்றன.