ஷார்ஜாவில் நடந்து வரும் முதல் டெஸ்டில் பிரெண்டன் டெய்லரின அபார சதத்தால் முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 326 ரன்கள் குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இன்னசண்ட் காலா, பென் கரன் தொடக ஆட்டக்காரர்களாக இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 60 ரன்களை சேர்த்த நிலையில், இன்னசண்ட் காலா 34 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து பென் கரனுடன் பிரெண்டன் டெய்லர் இணைந்தார். இந்த ஜோடியும் பொறுப்புடன் ஆடியது.
2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 65 ரன்கள் சேர்த்தபோது பென் கரன் 42 ரன்னில் வெளியேறினார்.
பிரெண்டன் டெய்லர் உடன் பிரியன் பென்னட் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய பிரெண்டன் டெய்லர் சதமடித்து அசத்தினார். அவர் 131 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 87 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 326 ரன்கள் குவித்துள்ளது. பிரியன் பென்னட் 71 ரன்னும், வெஸ்லி மாதேவீர் 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் சார்பில் ஜியா உர் ரகுமான் அக்பர் 2 விக்கெட் வீழ்த்தினார்.