கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே 169/7

ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்துள்ளது.

ஷார்ஜாவில் நடந்து வரும் 2வது டெஸ்டின் மூன்றாம் நாளில் பிரெண்டன் டெய்லர் அரை சதத்தால் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் மோதும் டி20 மற்றும் டெஸ்ட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே

இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஷார்ஜாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 339 ரன்கள் குவித்தது. பிரெண்டன் டெய்லர் சதமடித்து 119 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் இன்னசென்ட் காலா 96 ரன்னில் ஆட்டமிழந்தார். பென் கர்ரன் 44 ரன்னில் வெளியேறினார்.

நசீர் கான் மரூப்கி 7 விக்கெட்

ஆப்கானிஸ்தான் சார்பில் நசீர் கான் மரூப்கி 7 விக்கெட்டும், ஜியாவுர் ரஹ்மான் ஷரிபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆப்கானிஸ்தான் 217 ரன்னுக்கு ஆல் அவுட்

தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களுக்கு சுருண்டது. அப்சல் சசாய் அரை சதம் கடந்து 63 ரன்னில் அவுட்டானார். ரஹ்மதுல்லா ஜட்ரன் 34 ரன் எடுத்தார்.

ஜிம்பாப்வே சார்பில் வின்சென்ட் மசகெசா 4 விக்கெட்டும், முசாராபானி 3 விக்கெட்டும், கிரீமர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பிரெண்டன் டெய்லர் அரை சதம்

122 ரன்கள் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே 2வது இன்னிங்சில் களமிறங்கியது. பிரெண்டன் டெய்லர் அரை சதம் கடந்து 50 ரனனில் ஆட்டமிழந்தார். இன்னசெண்ட் காலா 33 ரன்னில் அவுட்டானார்.

மூன்றாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானை விட ஜிம்பாப்வே அணி 291 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் சார்பில் யாமின் அஹ்மத் சாய், சலீம் சபி, ஜியா உர் ரகுமான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

SCROLL FOR NEXT