உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் 2027, ஜூன் 9 முதல் 13-ம் தேதி வரை நடக்கிறது.
ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இரு ஆண்டுக்கு ஒருமுறை நடந்து வருகிறது. இந்தத் தொடரில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் உள்ளூரில் 3, அந்நிய மண்ணில் 3 என மொத்தம் 6 டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டும். அதன்படி, புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.
முதல் இரு தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. 2019-21ல் நியூசிலாந்தும், 2021-23ல் ஆஸ்திரேலியாவும் சாம்பியன் பட்டம் வென்றது. 2023-25 சீசனில் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் ஆனது.
நான்காவது சீசன் (2025-2027) தற்போது நடந்து வருகிறது. இதுவரை நடந்த போட்டிகள் முடிவில் இந்திய அணி 9 டெஸ்டில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் (1 'டிரா'), 48.15 சதவீத புள்ளிகள் பெற்று, 5வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா (87.50), தென் ஆப்ரிக்கா (75.00) ஆகியவை முதல் இரு இடத்தில் உள்ளன.
இதற்கிடையே, 2025-27 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நடக்கும் தேதி இடத்தை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 4-வது முறையாக இங்கிலாந்தில் 2027, ஜூன் 9 முதல் 13-ம் தேதி வரை தி ஓவல் மைதானத்தில் நடக்க உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியை வரும் 2031 வரை இங்கிலாந்தில் நடத்த ஐ.சி.சி. அனுமதி அளித்துள்ளது.
இதனால் அடுத்த இரு (2027-2029, 2029-2031) தொடரின் இறுதிப்போட்டிகளும் இங்கிலாந்தில் நடக்கும்.
இந்நிலையில், கடந்த 2023க்குப் பின் மீண்டும் இம்மைதானத்தில் இறுதிப்போட்டி நடக்க உள்ளது.
கடந்த 2025ல் இறுதிப்பொட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.
சமீபத்தில் இங்கு நடந்த இங்கிலாந்து-நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் மோசமாக இருந்ததால் மைதானத்துக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது. இதனால் ஆடுகளத்தை மேம்படுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, 2027 இறுதிப்போட்டி ஓவல் மைதானத்துக்கு மாற்றப்பட்டது.