ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி துணை கேப்டனான ஆஷ்லே கார்ட்னர், தனது சக வீராங்கனையுடன் தவறான தொடர்பு வைத்திருந்தார் என அவரது மனைவி மோனிகா ரைட் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருந்து வருபவர் ஆஷ்லே கார்ட்னர். இவரும், இவரது தோழியான மோனிகா ரைட்டும் காதலித்து வந்தனர். இதையடுத்து, கடந்த 2025, ஏப்ரல் மாதம் இருவரும் முறைப்படி தன்பாலின திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் நடந்த சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ஆஷ்லே கார்ட்னர் தன்னை ஏமாற்றிவிட்டு சக வீராங்கனையான ஜார்ஜியா வோல் உடன் தொடர்பு வைத்துள்ளார் என மோனிகா ரைட் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து மோனிகா ரைட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜார்ஜியா வோலின் புகைப்படத்தை பகிர்ந்து, என் மனைவி என்னை ஏமாற்றிவிட்டு இவருடன்தான் தொடர்பு வைத்திருந்தார் என பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
ஒருவர் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் முன்மாதிரியாகத் திகழும் சிறப்பைப் பெற்றிருக்கும்போது, உயர்ந்த தார்மீக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது என நான் கருதுகிறேன்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா இது குறித்து ஏன் பொதுவெளியில் எதுவும் தெரிவிக்கவில்லை என்பதுதான் எனக்குப் புரியவில்லை.
அவர்களின் இந்த மவுனம் ஆஷ்லே மற்றும் ஜார்ஜியா ஆகியோரின் செயல்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறதா?
குறிப்பாக அதிகார ஏற்றத்தாழ்வு நிலவும் சூழலில், ஒரு ஜூனியர் ஊழியருடன் முறையற்ற உறவு வைத்துக்கொண்டு, அதே சமயம் தலைமைப் பொறுப்பிலும் தொடர்ந்து நீடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அணி கேப்டன்கள் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இத்தகைய நடத்தை அந்த எதிர்பார்ப்பிலிருந்து வெகுவாகக் கீழே உள்ளது என காட்டமாகத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த 2025 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின்போதே இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின், இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆஷ்லே கார்ட்னர் மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.