Nigel French
கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: நெதர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்ரீ சராணி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் குரூப் 1 பிரிவில் இந்திய மகளிர் அணி இடம்பெற்றுள்ளது.

இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்திய அணி இன்று நெதர்லாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா தொடக்க வீராங்கனைகளாக இறங்கினர்.

அபார பேட்டிங்:

இருவரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். ஷபாலி வர்மா டி20 உலகக் கோப்பையில் முதல் அரை சதத்தைப் பதிவு செய்தார். அவர் 55 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது. ஸ்மிருதி மந்தனா அரை சதம் கடந்து 74 ரன்னில் வெளியேறினார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் 20 ரன்னும், யஸ்திகா பாட்டியா 3 ரன்னிலும், ஹர்மன்பிரீத் கவுர் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து சார்பில் கரோலின் டி லாங்கே 2 விக்கெட்டுகளையும், ஐரிஸ் வில்லிங், ஹீத்தர் செய்கர்ஸ் மற்றும் மைத்ரி வேன் டி ராட் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

நெதர்லாந்து சொதப்பல்:

கடின இலக்கை துரத்திய நெதர்லாந்து மகளிர் அணிக்கு துவக்க வீராங்கனைகளான ஹீத்தர் செய்கர்ஸ் (21 ரன்கள்), ஃபீபி மொல்கென்பேர் (15 ரன்கள்) அடித்து அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் பபெட் டி லீட் (28 ரன்கள்) ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய ஸ்டெரி காலிஸ் தன் பங்கிற்கு 18 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதில் சிலர் ஒற்றை இலக்க ரன்களும், பின்வரிசையில் களமிறங்கியவர்களில் மூன்று பேர் ரன் ஏதும் எடுக்காமல் தங்களது விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.

இந்திய அணி வெற்றி:

இதனால் நெதர்லாந்து மகளிர் அணி 17.3 ஓவர்களில் வெறும் 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய மகளிர் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய மகளிர் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்ரீ சராணி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவர் தவிர ஷபாலி வெர்மா 3 விக்கெட்டுகளையும், நந்தனி ஷர்மா 2 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா 1 விக்கெட் கைப்பற்றினர்.