கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கோப்பை: முதல் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணி அபார வெற்றி

இங்கிலாந்து மகளிர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ப்ரெயா கெம்ப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

10-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய நேரப்படி நேற்று (ஜூன் 12) நள்ளிரவு தொடங்கியது. இந்தியா உள்பட 12 அணிகள் பங்கேற்றுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது. மொத்தம் 12 அணிகள் 2 பிரிவுகளாக விளையாடுகின்றன.

இந்த தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை மகளிர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணிக்கு துவக்க வீராங்கனைகளான ஏமி ஜோன்ஸ் மற்றும் டேனி ஹோட்ஜ் சிறப்பான துவக்கம் கொடுத்தனர்.

முதலில் பேட் செய்த நிலையில், இருவரும் நிதானமாக ஆடி ரன்குவிப்பில் கவனம் செலுத்தினர். இருவரும் அரைசதம் கடந்த போது, ஏமி ஜோன்ஸ் 38 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில், தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் நேட் ஸ்கிவர் ப்ரன்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் தன் பங்கிற்கு 22 பந்துகளில் 46 ரன்களை விளாசினார்.

மறுப்பக்கம் டேனி ஹாட்ஜ் 62 பந்துகளில் 105 ரன்களை குவித்தார். இதன் காரணமாக இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் மட்டும் இழந்து 219 ரன்களை குவித்தது. கடின இலக்கை துரத்திய இலங்கை மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியின் துவக்க வீராங்கனைகளான விஷ்மி குணரத்ன மற்றும் கேப்டன் சமாரி அட்டபத்து முறையே 6 மற்றும் 4 ரன்களை மட்டும் அடித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்தவர்களில் ஹர்ஷிதா சமரவிக்ரம (29 ரன்கள்), ஹனிஸ்மா கருணரத்ன (11 ரன்கள்), கவிஷா தில்ஹாரி (19 ரன்கள்), நிலக்ஷிகா சில்வா (37 ரன்கள்) என ரன் குவிக்க போராடினர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்கள் முடிவில் இலங்கை மகளிர் அணி வெறும் 132 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கலாந்து மகளிர் அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து மகளிர் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ப்ரெயா கெம்ப் 4 விக்கெட்டுகளையும், சோபி எக்கில்ஸ்டோன் மற்றும் சார்லி டீன் தலா 2 விக்கெட்டுகளையும், லாரென் பெல் மற்றும் லின்ஸி ஸ்மித் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.