கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட்: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடிய தீப்தி சர்மா 62 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்

மாலை மலர்

இந்திய மகளிர் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபியா டங்க்லி 83 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் கிராந்தி கவுட், சினே ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 259 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி 62 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட தீப்தி சர்மாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.