மகளிர் ஆசிய கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இலங்கை மகளிர் அணி.
10-ஆவது மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளை சேர்ந்த நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
அதன்படி 'ஏ' பிரிவில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா (3 வெற்றியுடன் 6 புள்ளி), பாகிஸ்தான் (4 புள்ளி) அணியும் 'பி' பிரிவில் முதல் இரு இடங்களை பெற்ற நடப்பு சாம்பியன் இலங்கை (6 புள்ளி) மற்றும் வங்காளதேசம் (4 புள்ளி) ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.
நேற்று முன்தினம் நடந்த முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மகளிர் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த வகையில் நேற்றிரவு (செப். 11) நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு ஆரம்பமே அதர்ச்சி காத்திருந்தது. அந்த அணிக்கு தொடக்கம் கொடுத்த முனீபா அலி 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய ஷவால் ஜூல்ஃபிகர் 16 பந்துகளில் 24 ரன்களை எடுத்து அவுட் ஆனார். பிறகு களமிறங்கிய குல் ஃபெரோஸா 21 ரன்களுக்கு நடையை கட்டினார்.
ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையில், மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் ஃபாத்திமா சனா அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது. கடைசி வரை களத்தில் இருந்த ஃபாத்திமா 36 பந்துகளில் 47 ரன்களை எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் மகளிர் அணி 5 விக்கெட் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது.
சற்றே எளிய இலக்கை துரத்திய இலங்கை மகளிர் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள்
சமாரி அட்டப்பட்டு 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க இமெஷா துலானி 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய சஞ்சனா கவிண்டி ரன் ஏதும் எடுக்காமலும், ஹாசினி பெரெரா 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
பிறகு களமிறங்கிய ஹர்ஷிதா சமரவிக்ரம மற்றும் கவிஷா தில்ஹாரி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்த ஜோடி முறையே 36 மற்றும் 33 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. கடைசியில் 18.4 ஓவர்களில் இலங்கை மகளிர் அணி வெறும் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது. இதன் மூலம் இலங்கை மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. நாளை (செப்டம்பர் 13) நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் களம் காண்கின்றன.