கிரிக்கெட்

மகளிர் ஆசிய கோப்பை: ஐக்கிய அரபு அமீரகத்தை வீழ்த்தியது வங்கதேச மகளிர் அணி

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

துபாயில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேசம் மகளிர் அணி ஐக்கிய அரபு அமீரகத்தின் மகளிர் அணியை வீழ்த்தி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று நடைபெற்ற க்ரூப் பி பிரிவு ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிகள் களம் கண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரகம் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

வங்கதேசம் சுமாரான தொடக்கம்:

டாஸ் தோற்ற நிலையில், பேட்டிங் தொடங்கிய வங்கதேசம் மகளிர் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீராங்கனையான திலாரா அக்தெர் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இவருடன் களமிறங்கிய ஜூரியா ஃபெர்டோஸ் 16 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சோபனா மொஸ்தரி 3 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில், கேப்டன் நிகர் சுல்தானா மற்றும் ஷர்மின் அக்தெர் ஜோடி நிதானமாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது. இந்த ஜோடி முறையே 23 மற்றும் 38 ரன்கள் எடுத்த நிலையில், தங்களது விக்கெட்டை பறிக்கொடுத்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கியவர்களில் நஹிதா அக்தெர் 26 பந்துகளை எதிர்கொண்டு 16 ரன்களை எடுத்தார்.

ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸ் முடிவில் வங்கதேசம் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் வெறும் 103 ரன்களை மட்டுமே எடுத்தது. ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் சிறப்பாக பந்துவீசய சுரக்ஷா கோடீ 3 விக்கெட்டுகளையும், இந்துஜா நந்தகுமார் 2 விக்கெட்டுகளையும், அர்ச்சனா சுப்ரியா மற்றும் ஜனனி திருக்குமர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

வங்கதேசம் மகளிர் அணி வெற்றி:

104 ரன்கள் எனும் எளிய இலக்கை துரத்திய ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணிக்கு தொடக்கம் கொடுத்த கேப்டன் இஷா ஓஸா 2 ரன்களும், தீர்த்தா சதிஷ் 11 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சமைரா 8 ரன்களுக்கும், ரினிதா ரஜித் 5 ரன்களுக்கும் நடையை கட்டினர்.

இவர்களை தொடர்ந்து ஆடிய ஹீனா தன் பங்கிற்கு 19 பந்துகளில் 18 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தர்.

இதனால், ஐக்கிய அரபு அமீரகம் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு வெறும் 69 ரன்களையே எடுத்தது. இதனால், வங்கதேசம் மகளிர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

SCROLL FOR NEXT