கெமார் ரோச், ஜெய்டன் சீல்ஸ்
கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்சிஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், இலங்கை 308 & 101 என ஆல்அவுட் ஆகி தோல்வியை சந்தித்தது.

இலங்கை முதல் இன்னிங்ஸ் 308

இலங்கை அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் ஆன்டிக்குவாவில் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா 120 ரன்கள் அடிக்க முதல் இன்னிங்சில் இலங்கை 308 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 626 டிக்ளேர்

பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. அமீர் ஜாங்கூ இரட்டை சதமும் (233), ராஸ்டன் சேஸ் (194) சதமும் விளாச, வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இலங்கை அணி தரப்பில் மிலான் ரத்நயகா 5 விக்கெட் வீழ்த்தினார்.

இலங்கை 2-வது இன்னிங்சில் 101 ஆல்அவுட்

பின்னர் 318 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து விச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை அணி 101 ரன்களில் சுருண்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்சில் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினேஷ் சண்டிமல் அதிகபட்சமாக 43 ரன்கள் சேர்த்தார். தினுஷா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். கெமார் ரோச் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜெய்டன் சீல்ஸ் 3 விக்கெட்டும், ஷமர் ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இரட்டை சதம் விளாசிய அமீர் ஜாங்கூ ஆட்டநாயகன் விருது வென்றார். 2-வது மற்றும் கடைசி போட்டி அடுத்த மாதம் 3-ந்தேதி தொடங்குகிறது.