வெஸ்ட் இண்டீஸ்- வங்கதேசம் டெஸ்ட்
கிரிக்கெட்

டிராவில் முடிந்த 2-வது டெஸ்ட்: வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

கடைசி நாளில் வங்கதேசம் வெற்றிக்கு 369 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசம் சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மிர்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 356 ரன்கள் குவிப்பு

2-வது டெஸ்ட் கடந்த 5-ந்தேதி சில்ஹெட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அமிர் ஜாங்கூ 133 ரன்கள் விளாச வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 356 ரன்கள் குவித்தது. பின்னர் வங்கதேசம் முதல் இன்னிங்சை தொடங்கியது. தவ்ஹித் ஹிரிடோய் ஆட்டமிழக்காமல் 242 ரன்கள் விளாச வங்கதேசம் 386 ரன்களில் ஆல்அவுட் ஆனது.

வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 398 ரன்கள் குவித்து டிக்ளேர்

30 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் குவித்திருந்தது.

இன்று கடைசி மற்றும் 5-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 398 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கவெம் ஹோட்ஜ் 142 ரன்கள் விளாசினார்.

வங்கதேச அணிக்கு 369 ரன்கள் வெற்றி இலக்கு

பின்னர் 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களம் இறங்கியது. ஹிரிடோய் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் 49 ரன்கள் சேர்த்தார்.

மோசமான வெளிச்சம் காரணமாக வங்கதேசம்அணி 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் இரு அணி கேப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்ள விரும்பினர். இதனால் இன்றைய ஆட்டம் அத்துடன் நிறைவுற்று போட்டி டிராவில் முடிந்தது.

முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 1-0 எனக் கைப்பற்றியுள்ளது. ஜொமெல் வாரிகன் தொடர் நாயகன் விருதையும், தவ்ஹித் ஹிரிடோய் ஆட்ட நாயகன் விருதையும் வென்றனர்.

SCROLL FOR NEXT