கிரிக்கெட்

2வது டி20 போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சாய் ஹோப் அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என வென்று கைப்பற்றி அசத்தியது.

இதைத் தொடர்ந்து நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி பேட்டிங்:

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் இறங்கினர்.

இந்த ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தியது. முதல் விக்கெட்டுக்கு 42 ரன்கள் சேர்த்த நிலையில் அபிஷேக் சர்மா 20 ரன்னில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், சஞ்சு சாம்சனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார்.

இரண்டாவது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் ஜோடி 43 பந்தில் 97 ரன்கள் குவித்த நிலையில் இஷான் கிஷன் 43 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 41 பந்தில் 4 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 82 ரன்கள் குவித்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஷ்ரேயஸ் அய்யர், திலக் வர்மா உடன் இணைந்தார். இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களைக் குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் அபாரம்:

கடின இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் கமில் பூரான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கமில் பூரான் 4 ரன்களில் ஆட்டமிழந்தார், பிறகு களமிறங்கிய ஹெட்மயர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ரோவ்மேன் பொவல் 13 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பிறகு களமிறங்கிய ரூதர்ஃபோர்டு சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் கவனம் செலுத்தினர். இவர் 37 பந்துகளில் 84 ரன்களை விளாசி ஆவுட் ஆனார். மறுப்பக்கம் ஷாய் ஹோப் அதிரடியாக ஆடி சதம் விளாசினார். கடைசியில் ரொமரியோ ஷெப்பர்டு 13 பந்துகளில் 34 ரன்களை விளாசினார்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களில் வெறும் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களை எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் மயன்க் யாதவ் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலையை எட்டியுள்ளன.

SCROLL FOR NEXT