லாகூர்:
2026 பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இன்று முதல் தொடங்குகிறது. இந்நிலையில், லாகூரில் நடைபெற்ற கேப்டன்களுக்கான செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் டேவிட் வார்னர், பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து பள்ளிக்கூட சிறுவர்கள் என கடுமையாக விமர்சித்துள்ள வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் கடந்த மார்ச் 25 அன்று பிஎஸ்எல் தொடரில் பங்கேற்கும் அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கராச்சி கிங்ஸ் அணியின் கேப்டனான 39 வயதான டேவிட் வார்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மேடையில் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த பாகிஸ்தான் வீரர்களான முகமது ரிஸ்வான், ஷாஹீன் அப்ரிடி, சவுத் ஷகீல் மற்றும் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசேன் ஆகியோர் தங்களுக்குள் பேசிக் கொண்டு சிரித்துக் கொண்டு இருந்தனர்.
இதனை கவனித்து ஆத்திரமடைந்த வார்னர், உடனடியாக தனது பேச்சை பாதியில் நிறுத்திவிட்டு, "என்ன பிரச்சனை ஜென்டில்மேன்? மன்னிக்கவும், இங்கே சில பள்ளிக்கூட சிறுவர்கள் இருக்கிறார்கள்" என்று அவர்களின் நடவடிக்கையை நேரடியாகவே மைக்கில் விமர்சித்தார்.
வார்னரின் இந்த அதிரடியான பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்து அமைதியாகினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.