கிரிக்கெட்

களம் திரும்புவது எப்போது? ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பதில்

தொடரின் நடுப்பகுதிக்குள் நான் பழைய நிலைக்கு திரும்புவதற்கான ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம் என ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து முதுகு வலியால் அவதிப்படுகிறார். இதனால் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடவில்லை.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் கம்மின்ஸ் முழு உடல்தகுதியை எட்டாததால் தொடக்ககட்ட ஆட்டங்களை தவறவிடுவார் என்றும், அவர் களம் திரும்பும் வரை இஷான் கிஷன் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்றும் சமீபத்தில் ஐதராபாத் நிர்வாகம் அறிவித்தது.

இந்த நிலையில் ஐதராபாத் அணியுடன் இணைந்துள்ள கம்மின்சிடம் எப்போது களம் இறங்குவீர்கள் என்று கேட்ட போது 'முதுகு காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். ஓரளவு நல்ல நிலையில் தான் இருக்கிறேன். வலைப்பயிற்சியில் பந்து வீச தொடங்கி விட்டேன். ஐ.பி.எல். விரைவில் தொடங்க போகிறது. அதன் தொடக்க கட்ட ஆட்டங்களில் நான் பங்கேற்க மாட்டேன்.

ஆனால் நான் மீண்டும் களம் திரும்ப அதிக காலம் பிடிக்காது. தற்போது நான் மூன்று நாட்களுக்கு ஒருமுறை பந்து வீசி வருகிறேன். போட்டி தொடரின் நடுப்பகுதிக்குள் நான் பழைய நிலைக்கு திரும்புவதற்கான ஒரு திட்டத்தை வகுத்துள்ளோம். எங்களது திட்டத்தின்படி எல்லாம் சரியாக நடந்தால் நான் தொடரின் பிற்பாதியிலும், இறுதிப்போட்டியிலும் விளையாடுவேன் என்று நம்புகிறேன்' என்றார்.