கிரிக்கெட்

டிரினிடாட் டெஸ்ட்: 90 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட் வீழ்த்தினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 90 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 98.5 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாய் ஹோப் 92 ரன்னும், காவெம் ஹோட்ஜ் 84 ரன்னும் எடுத்தனர். ஷமார் ஜோசப் 23 ரன் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பில் முகமது அலி 4 விக்கெட்டும், மொகமது அப்பாஸ் 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத் 2 விக்கெட்டும், ஆமீர் ஜமால் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஷான் மசூத் சதம்

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் விக்கெட் ஒரு ரன்னில் வீழ்ந்தது. 2வது விக்கெட்டுக்கு இமாம் உல் ஹக்-ஷான் மசூத் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் இமாம் உல் ஹக் 63 ரன்னில் அவுட்டானார்.

சிறப்பாக ஆடிய ஷான் மசூத் சதமடித்து 109 ரன்னில் வெளியேறினார். பாபர் அசாம் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 80.1 ஓவரில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட்டும், கீமர் ரோச், ஷமார் ஜோசப் தலா 2 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

29 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சில் 181 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷமார் ஜோசப் 38 ரன்னும், சந்தர்பால் 35 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 210 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், குர்ரம் ஷசாத், முகமது அலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இலக்கு 211 ரன்கள்

இதையடுத்து, 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் களமிறங்குகியது. ஆரம்பம் முதலே வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பந்துவீச்சில் மிரட்டினர். இதனால் பாகிஸ்தான் அணி விரைவில் விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் பாபர் அசாம் மட்டும் தாக்குப் பிடித்து அரை சதம் கடந்தார்.

கடைசி விக்கெட்டுக்கு பாபர் அசாம்-மொகமது அப்பாஸ் ஜோடி ஓரளவு ரன்கள் சேர்த்தது. 49 ரன்கள் சேர்த்த நிலையில் அப்பாஸ் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்சில் 40.2 ஓவரில் 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜெய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டும், கீமர் ரோச், ஜஸ்டின் கிரீவ்ஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஜஸ்டின் கிரீவ்ஸ்க்கு வழங்கப்பட்டது.