வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டாக்காவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் 272 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷட்மன் இஸ்லாம் பொறுப்புடன் ஆடி சதமடித்து 105 ரன்னில் அவுட்டானார்.
4-வது விக்கெட்டுக்கு இணைந்த ஷட்மன் இஸ்லாம்-தவ்ஹித் ஹிருதோய் ஜோடி 88 ரன் சேர்த்தது. ஹிருதோய் 42 ரன்னில் வெளியேறினார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜோமல் வாரிகன் 5 விக்கெட்டும், ஷமார் ஜோசப், ஜோஷ்வா பிஷப் தலா 2 விக்கெட்டும், ஜேடன் சீல்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜான் கேம்ப்பெல் அரைசதம் கடந்து 54 ரன்னில் அவுட்டானார். டேக்நரேன் சந்தர்பால் அரைசதம் கடந்து 56 ரன்னில் அவுட்டானார். ஜஸ்டின் கிரீவ்ஸ் 46 ரன்னில் வெளியேறினார்.
வங்கதேசம் சார்பில் நயீம் ஹாசன் 4 விக்கெட்டும், தைஜுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
27 ரன் முன்னிலை பெற்ற வங்கதேசம் அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே வங்கதேசம் விக்கெட்களை இழந்து தத்தளித்தது. இறுதியில், வங்கதேசம் அணி 2வது இன்னிங்சில் 48.4 ஓவரில் 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரோஸ்டன் சேஸ் 5 விக்கெட்டும், ஜோமல் வாரிகன் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிராண்டன் கிங், ஜான் கேம்ப்பெல் ஜோடி பொறுப்புடன் ஆடியது.
அரை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜான் கேம்ப்பெல் 49 ரன்னில் அவுட்டானார்.
நிதானமாக ஆடிய பிராண்டன் கிங் அரை சதம் கடந்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 35.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
பிராண்டன் கிங் 81 ரன்னும், காவெம் ஹோட்ஜ் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.