கிரிக்கெட்

வங்கதேசம் உடனான 2வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 356 ரன்னுக்கு ஆல் அவுட்

அமீர் ஜாங்கூ பொறுப்புடன் ஆடி சதமடித்து 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அமீர் ஜாங்கூ சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சிலெட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. பிராண்டன் கிங் 9 ரன்னிலும், காவெம் ஹோஜ்ட் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். ஜோஷ்வா டி சில்வா 12 ரன்னில் வெளியேறினர். ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்து தத்தளித்தது.

4வது விக்கெட்டுக்கு 131 ரன் சேர்த்த ஜோடி

அடுத்து இறங்கிய கெவின் விக்காம், அமீர் ஜாங்கூ ஜோடி பொறுப்புடன் ஆடியது. கெவின் விக்காம் அரை சதம் கடந்து 61 ரன்னில் அவுட்டானார். 4-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 131 ரன்கள் சேர்த்தது.

அமீர் ஜாங்கூ சதம்

பொறுப்புடன் ஆடிய அமீர் ஜாங்கூ சதமடித்து அசத்தினார். வெளிச்சமின்மையால் ஆட்டம் முன்னரே நிறுத்தப்பட்டது. முதல் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுக்கு 235 ரன் எடுத்திருந்தது.

அமீர் ஜாங்கூ 111 ரன்னும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடந்து வருகிறது. அமீர் ஜாங்கூ-ஜஸ்டின் கிரீவ்ஸ் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்த நிலையில், கிரீவ்ஸ் அரை சதம் கடந்து 56 ரன்னில் அவுட்டானார். அமீர் ஜாங்கூ 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வங்கதேசம் அணி சார்பில் ஹசன் மஹ்முது 6 விக்கெட்டும், தஸ்கின் அகமது, மெஹிதி ஹசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, வங்கதேசம் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.

SCROLL FOR NEXT