கிரிக்கெட்

பாகிஸ்தான் அசத்தல் பந்துவீச்சு: 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் திணறல்

பொறுப்புடன் ஆடிய ஷான் மசூத் சதமடித்து அசத்தினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரினிடாட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 98.5 ஓவரில் 311 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷாய் ஹோப் 92 ரன்னும், காவெம் ஹோட்ஜ் 84 ரன்னும் எடுத்தனர். ஷமார் ஜோசப் 23 ரன் எடுத்தார்.

முகமது அலி 4 விக்கெட்

பாகிஸ்தான் சார்பில் முகமது அலி 4 விக்கெட்டும், மொகமது அப்பாஸ் 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத் 2 விக்கெட்டும், ஆமீர் ஜமால் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. முதல் விக்கெட் ஒரு ரன்னில் வீழ்ந்தது. 2வது விக்கெட்டுக்கு இமாம் உல் ஹக்-ஷான் மசூத் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் இமாம் உல் ஹக் 63 ரன்னில் அவுட்டானார்.

சிறப்பாக ஆடிய ஷான் மசூத் சதமடித்து 109 ரன்னில் வெளியேறினார். பாபர் அசாம் 23 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 80.1 ஓவரில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 5 விக்கெட்டும், கீமர் ரோச், ஷமார் ஜோசப் தலா 2 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

29 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. தொடக்கம் முதலே பாகிஸ்தான் வீரர்கள் துல்லியமாகப் பந்துவீசினர். இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

தொடக்க ஆட்டக்காரர் சந்தர்பால் 35 ரன்கள் எடுத்தர். மற்ற வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

பாகிஸ்தான் பந்துவீச்சு அபாரம்

மூன்றாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்துள்ளது. ஷமார் ஜோசப் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 155 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது

பாகிஸ்தான் சார்பில் முகமது அபாஸ் 3 விக்கெட்டும், குர்ரம் ஷசாத் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இன்று நான்காம் நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில், மேலும் 3 விக்கெட்டை கைப்பற்றினால் பாகிஸ்தான்வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் விழாமல் பொறுமையாக ஆடினாலும், சிறப்பாக பந்துவீசினாலும் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.