கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: வங்கதேச கேப்டன் கூறியது இதுதான்

இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் டார்வினில் நாளை தொடங்குகிறது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நஜ்முல் ஹூசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

அதன்படி, ஆஸ்திரேலியா-வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் டார்வினில் நாளை தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்தப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

டெஸ்ட் போட்டி எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது குறித்து அணியினரிடையே எந்த விவாதமும் இல்லை.

சிறப்பாகச் செயல்பட விரும்புகிறோம்

வீரர்களாகிய நாங்கள் 5 நாட்களும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம். 5 நாட்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவும், ஒவ்வொரு செஷனிலும் சிறப்பாகச் செயல்படவும் விரும்புகிறோம்.

இதைத்தான் நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம். எனவே ஒவ்வொரு 'செஷனும்' முக்கியமானது. அது 4 நாட்களா, 5 நாட்களா அல்லது 3 நாட்களா என்பது குறித்தெல்லாம் விவாதங்கள் இருக்கலாம்.

ஆனால் ஒரு வீரராக, இங்கு எவ்வளவு சிறப்பாக கிரிக்கெட் விளையாட முடியும் என்பதிலேயே நாங்கள் எப்போதும் கவனம் செலுத்துவோம்.

பவுன்ஸ் மிக முக்கியமானது

நிச்சயமாக. பந்தின் பவுன்ஸ் தான் இதில் மிக முக்கியமானது என நான் கருதுகிறேன். கடந்த சில மாதங்களாகவே சொந்த மண்ணில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகக்கூடிய ஆடுகளங்களை நாங்கள் தயார் செய்து, அத்தகைய ஆடுகளங்களில் சில ஒருநாள் தொடர்களிலும் விளையாடிப் பார்த்தோம். அதன்மூலம் எங்களுக்கு இது குறித்து ஓரளவுக்குத் தெளிவு கிடைத்துள்ளது.

இங்குள்ள ஆடுகளத்தின் பவுன்ஸ் தன்மை மாறுபட்டதாக இருக்கும் என்பதால் நாங்கள் அதற்கேற்ப எங்களைச் சிறப்பாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாங்கள் இங்கு சுமார் 10 முதல் 12 நாட்களுக்கு முன்பே வந்துவிட்டோம். இது ஆடுகளத்தின் தன்மை குறித்த கூடுதல் புரிதலை எங்களுக்கு அளித்துள்ளது.

சவால்கள் இருக்கத்தான் செய்யும்; எதிரணியின் பந்துவீச்சு அபாரமானது, உலகத்தரம் வாய்ந்தது.

ஆனால் ஒரு அணியாக, அவர்களை எதிர்கொள்வதற்கும் அந்தச் சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும் இது ஒரு நல்ல வாய்ப்பு.

எங்கள் வீரர்கள் இதற்கெல்லாம் தயாராக இருக்கிறார்கள் என்பதிலும், இந்தச் சவாலை அவர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வார்கள் என்பதிலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.