கிரிக்கெட்

VIDEO: முதல் ஓவரில் அதிக ரன்களை விட்டுகொடுத்த இளம் வீரர்: பிஎஸ்எல் தொடரில் மோசமான சாதனை

பிஎஸ்எல் வரலாற்றிலேயே போட்டியின் முதல் ஓவரில் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை இஸ்மாயில் படைத்துள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் முல்தான் சுல்தான்ஸ்- லாகூர் கலாண்டர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி மழை காரணமாக 13 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு முகமது நயீம் மற்றும் பர்வேஸ் ஹொசைன் எமோன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முல்தான் சுல்தான்ஸ் தரப்பில் முதல் ஓவரை வீச 20 வயதான அறிமுக வீரர் முகமது இஸ்மாயில் அழைக்கப்பட்டார்.

தனது முதல் ஓவரிலேயே 26 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனையைப் படைத்துள்ளார். இது பிஎஸ்எல் வரலாற்றிலேயே போட்டியின் முதல் ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும்.

பதற்றத்தில் பந்துவீசிய இஸ்மாயில், அந்த ஓவரில் மட்டும் 10 ரன்களை வைடு மூலமாகவே வழங்கினார். முகமது நயீம் அந்த ஓவரில் மூன்று பவுண்டரிகளை விளாசினார். ஓவரின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் குவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன் 2024-ல் லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு எதிராக பெஷாவர் சல்மி அணி முதல் ஓவரில் 19 ரன்கள் எடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது. அதை தற்போது இஸ்மாயில் முறியடித்துள்ளார்.

இந்த அதிரடித் தொடக்கத்தைப் பயன்படுத்திக் கொண்ட லாகூர் அணி 13 ஓவர்களில் 151 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

முதல்ஓவரில் சொதப்பினாலும், முகமது இஸ்மாயில் பின்னர் மீண்டெழுந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT