கிரிக்கெட்

லண்டனில் மகாராஷ்டிர துணை முதல்வர் ஷிண்டேவை சந்தித்த விராட் கோலி

நவீன வசதிகளுடன் அமையவுள்ள 'விளையாட்டு நகரம்' குறித்த திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, லண்டனுக்குச் சென்றிருந்த மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்து பேசினார்.

விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகள், விளையாட்டு வீரர்களின் மேம்பாடு மற்றும் மாநிலத்தின் வளர்ச்சி ஆகியவை குறித்து அவர்கள் விரிவாக விவாதித்ததாக ஏக்நாத் ஷிண்டே அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

பரஸ்பர வாழ்த்து மற்றும் வரவேற்பு:

இந்த சந்திப்பின்போது, ​​பாரம்பரியமான சால்வை மற்றும் பூங்கொத்து வழங்கி ஷிண்டே கோலியை வரவேற்றார்; அதேவேளையில், இங்கிலாந்து பயணத்தின்போது மூன்று மதிப்புமிக்க விருதுகளைப் பெற்றதற்காக ஷிண்டேவுக்கு கோலி வாழ்த்து தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் விளையாட்டு வசதிகளை விரிவுபடுத்துவதற்கும், தேசிய மற்றும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறும் திறமையாளர்களை உருவாக்குவதற்கும் தேவையான கொள்கை மாற்றங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.

சம்ருத்தி விரைவுச்சாலை, நவி மும்பை சர்வதேச விமான நிலையம், கடலோரச் சாலைத் திட்டம் (Coastal Road), அடல் சேது மற்றும் வதவன் துறைமுகம் உள்ளிட்ட மாநிலத்தின் வளர்ச்சியை முன்னெடுக்கும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து ஷிண்டே எடுத்துரைத்தார். மேலும், நவி மும்பை அருகே பல்வேறு விளையாட்டுகளுக்கான நவீன வசதிகளுடன் அமையவுள்ள 'விளையாட்டு நகரம்' குறித்த திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார்.

விராட் கோலி ஆர்வம்:

இளைஞர்களுக்கு உயர்தரக் கல்வியுடன் சிறந்த விளையாட்டுப் பயிற்சியையும் வழங்கும் இத்தகைய முயற்சிகளை வலுப்படுத்துவதில் கோலி மிகுந்த ஆர்வம் காட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான 'கேலோ இந்தியா' போன்ற தேசிய அளவிலான முன்னெடுப்புகள், லட்சக்கணக்கான இளைஞர்களை விளையாட்டுத் துறையில் ஈடுபட தூண்டுவதாகவும் ஷிண்டே குறிப்பிட்டார்.

தனது தனிப்பட்ட பயணத்தை பற்றி பகிர்ந்துகொண்ட கோலி, கிரிக்கெட் மீதான தனது தீராத ஆர்வத்தை வெளிப்படுத்தினார். ஓய்வுக்குப் பிறகும் இத்துறையில் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்க விரும்புவதாகவும், உடற்தகுதி, ஊட்டச்சத்து மற்றும் முறையான உணவுமுறை ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து இளம் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டுவதில் தனக்குள்ள ஈடுபாட்டையும் அவர் வலியுறுத்தினார்.

யுவ சேனா பொதுச் செயலாளர் ராகுல் கனல் மற்றும் துணை முதல்வரின் மூத்த உதவியாளர்கள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நிறைவடைந்தது. ஷிண்டே தனது லண்டன் பயணத்தை செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கினார்.

SCROLL FOR NEXT