ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தனது ஒன்பதாவது ஐ.பி.எல். சதத்தை விராட் கோலி நேற்றைய போட்டியில் கடந்தார். புதன்கிழமை ராய்ப்பூரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ரன்னை எடுத்தபோது, தனது பங்கிற்கு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். முந்தைய இரண்டு ஆட்டங்களில் டக் அவுட் ஆன பிறகு, மூன்று போட்டிகளில் அவர் எடுத்த முதல் ரன் இதுவாகும்.
18வது ஓவரில் கார்த்திக் தியாகியின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் அடித்து 98 ரன்களை எட்டியபோது அவரது அடுத்த கொண்டாட்டம் நிகழ்ந்தது . ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி குதூகலத்தில் நடனம் ஆடினார். அடுத்த ஓவரில், அவர் தனது ஒன்பதாவது ஐபிஎல் சதத்தை எட்டினார்.
இந்த சதத்தின் மூலம், ஐபிஎல் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற தனது சாதனையை கோலி நீட்டித்துள்ளார். தற்போது அவர் ஒன்பது சதங்கள் அடித்துள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் பாபர் அசாமின் சாதனையை சமன் செய்ய கோலிக்கு இன்னும் மூன்று சதங்கள் தேவை.
கடந்த இரண்டு போட்டிகளில் சொதப்பிய விராட் கோலி, ஒரு நேர்த்தியான ஆட்டமிழக்காத சதத்தின் மூலம் மீண்டு வந்தார். இதன்மூலம், புதன்கிழமை ராய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.
வெற்றிக்குத் தேவையான 193 ரன்களைத் துரத்திய போட்டியில், கோலி 60 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 105 ரன்கள் விளாசினார். மேலும், தேவ்தத் படிக்கலுடன் (27 பந்துகளில் 37 ரன்கள்) இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஆட்டத்தின் போக்கையே மாற்றியமைத்த 92 ரன் பார்ட்னர்ஷிப்பை அமைத்து, ஆர்சிபி அணியை 19.1 ஓவர்களில் வெற்றிக்கு வழிநடத்தினார்.
இந்த வெற்றியின் மூலம், ஆர்சிபி அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சமமான புள்ளிகளாகும், ஆனால் நிகர ரன் விகிதத்தில் முன்னிலை வகிக்கிறது.
டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள்
22 - கிறிஸ் கெய்ல்
13 - பாபர் அசாம்
10 - டேவிட் வார்னர்
10 - விராட் கோலி*
9 - ரிலீ ரோசோவ் / சாஹிப்சாதா ஃபர்ஹான்
9 - குயின்டன் டி காக் / அபிஷேக் சர்மா
ஐபிஎல் தொடரில் அதிக சதங்கள்
9 - விராட் கோலி*
7 - ஜோஸ் பட்லர்
6 - கிறிஸ் கெய்ல்
6 - கே.எல். ராகுல்
5 - சஞ்சு சாம்சன்
மேலும், டி20 போட்டிகளில் 14,000 ரன்களை அதிவேகமாக எட்டியவர் என்ற பெருமையையும் கோலி பெற்றுள்ளார்.
டி20 போட்டிகளில் 14,000 ரன்களை எட்டிய மிகக் குறைந்த இன்னிங்ஸ்கள்
409 - விராட் கோலி*
423 - கிறிஸ் கெய்ல்
431 - டேவிட் வார்னர்
468 - ஜோஸ் பட்லர்
505 - அலெக்ஸ் ஹேல்ஸ்
633 - கீரோன் பொல்லார்ட்