கிரிக்கெட்

ஒரே சீசனில் ஏராளம்... விருதுகளை வாரி குவித்த வைபவ் சூர்யவன்ஷி!

237.30 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்தார்.

ஐ.பி.எல். 2026 தொடரின் தொடக்கம் முதலே தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணி வீரர்களுக்கு கடும் சவாலாக விளங்கியவர் இளம் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யன்ஷி. தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அவர் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரின் பல்வேறு விருதுகளை வென்று அசத்தியுள்ளார்.

அதன்படி ஐ.பி.எல். 2026-இன் மோஸ்ட் வேல்யுபில் பிளேயர், எமர்ஜிங் பிளேயர் ஆஃப் தி சீசசன், சூப்பர் ஸ்டிரைக்கர் ஆஃப் தி சீசன், ஆரஞ்சு தொப்பி வெற்றியாளர் மற்றும் சூப்பர் சிக்சஸ் ஆஃப் தி சீசன் ஆகிய விருதுகளை வென்றார். பீகாரில் பிறந்த 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஒரு அசாதாரணமான சீசனை கொண்டிருந்தார். அவர் 237.30 என்ற சிறப்பான ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்தார்.

சாதனை படைத்த 72 சிக்ஸர்கள் உட்பட, சூர்யவன்ஷியின் நிலையான ஆட்டங்கள், பல நீண்டகால ஐ.பி.எல். சாதனைகளை முறியடிக்கவும், இந்திய கிரிக்கெட்டின் மிகவும் நம்பிக்கைக்குரிய திறமைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் உதவியது.

வெறும் 15 வயது 65 நாட்களில், சூர்யவன்ஷி மிக இளம் வயதில் ஆரஞ்சு தொப்பியை வென்றவர் என்ற புதிய ஐ.பி.எல். சாதனையை படைத்துள்ளார். இதற்கு முந்தைய சாதனையை குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுதர்சன் 2025-ல் 23 வயது 231 நாட்களில் வென்று வைத்திருந்தார், அதேசமயம் சுப்மன் கில் 2023-ல் 23 வயது 263 நாட்களில் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார்.

விருதுகளை வென்ற பிறகு பேசிய வைபவ் சூர்யவன்ஷி "இது நன்றாக இருக்கிறது, ஆனால் பேட்டி கொடுக்க வேண்டியிருப்பதால் சற்று அழுத்தமாக உணர்கிறேன். நான் இப்போதெல்லாம் பால் குடிப்பதில்லை. ஒவ்வொரு ஆட்டத்தையும் எப்படி விளையாடுவது என்றால், எல்லா ஆட்டங்களையும் ஒரே மாதிரி விளையாட முடியாது.

நான் காயம் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால், என் உடற்தகுதியில் கவனம் செலுத்த வேண்டும். எல்லோரும் மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள். அனைத்து மூத்த வீரர்கள், துணை பணியாளர்கள் என அனைவரும் எனக்கு ஆதரவளிக்கிறார்கள், மேலும் இது ஒரு நல்ல சூழலாக இருக்கிறது," என்று இந்த சீசனின் மதிப்புமிக்க வீரர் விருதை வென்ற பிறகு சூர்யவன்ஷி கூறினார்.