கிரிக்கெட்

IPL 2026 | லக்னோ அணிக்கு எதிராக அதிரடி ஆட்டம்.. மற்றொரு சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி

6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் வெறும் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நேற்று (மே 19) இரவு நடந்த ஐ.பி.எல். 2026 போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி தனது சாதனைகளுக்கு மேலும் ஒரு பெரிய அங்கீகாரத்தைச் சேர்த்துள்ளார். ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம், ஒரு ஐ.பி.எல். சீசனில் 500 ரன்கள் எடுத்த இளம் வீரர் என்ற பெருமையை சூர்யவன்ஷி பெற்றார்.

2018-இல் டெல்லி டேர்டெவில்ஸ் (தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ்) அணிக்காக விளையாடிய ரிஷப் பண்ட் ஒரு ஐ.பி.எல். சீசனில் 500 ரன்களை கடந்த இளம் வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். நேற்றைய போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களின் உதவியுடன் வெறும் 23 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

15 வயதான இந்த இளம் வீரருக்கு இதுவரை இது ஒரு அற்புதமான சீசனாக அமைந்துள்ளது. மேலும், அந்த அணிக்காக அவர் வெளிப்படுத்தும் ஆட்டத்திறன், ரசிகர்கள் மற்றும் நிபுணர்கள் மத்தியில் அவரை மூத்த அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளது.

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடருக்கான இந்திய 'ஏ' அணியில் அவர் சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், அவருக்கு விரைவில் இந்திய அணியில் அறிமுக வாய்ப்பு வழங்க வேண்டும் என பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பி.சி.சி.ஐ.-ஐ வலியுறுத்தியுள்ளனர்.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 221 ரன்களை துரத்திய நிலையில், 19.1 ஓவர்களில் 3 விக்கெட இழப்புக்கு 225 ரன்களை குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இதில் வைபவ் சூர்யவன்ஷி மட்டும் 38 பந்துகளில் 93 ரன்களை விளாசினார்.