19 வயதிற்கான இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வந்தது. இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் இளைஞர்கள் அணி பலப்பரீட்சை நடத்தின.
பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கான் 111 பந்துகளில் 107 ரன்கள் குவித்தார். அப்துல் காதிர் 80 ரன்களும், பர்ஹான் யூசுப் 63 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி சார்பில் காவ்யா பரேஷ் படேல் 4 விக்கெட்டுகளும், சிகுருபதி வெங்கடா 3 விக்கெட்டும் விழ்த்தினர்.
பின்னர் 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இந்திய இளைஞர்கள் களம் இறங்கினர். தொடக்க வீரர்களான லக்ஷ்ய ராய்சந்தானி 80 ரன்களும், ஆர்யவீர் சேவாக் 58 ரன்களும் சேர்த்தனர். அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதனால் இந்த அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. தோல்வியடைந்து விடும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. இந்த நிலையில்தான் 8-வது விக்கெட்டுக்கு மனால் சவுகான் உடன் மோஹித் உல்வா ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்தியா வெற்றி பெறும் என்ற உணர்வு ஏற்பட்டது. ஆனால், 47.2 ஓவரில் 309 ரன்கள் எடுத்திருக்கும்போது மனால் சவுகான் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கடைசி விக்கெட்டுக்கு மோஹித் உல்வா உடன் சிகுருபதி வெங்கடா ஜோடி சேர்ந்தார். 49-வது ஓவரில் இந்த ஜோடி 17 ரன்கள் சேர்த்தது. இதனால் கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது.
முதல் 5 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தது இந்தியா. இதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், உல்வா கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அத்துடன் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது. வுல்மா 26 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.