டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் சேலத்துக்கு எதிரான போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது.
திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், டிஎன்பிஎல் தொடரின் 8வது லீக் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சேலம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் கவின் 38 ரன்னும், ஹரி நிஷாந்த் 36 ரன்னும் எடுத்தனர். நிதிஷ் ராஜகோபால் 30 ரன்னும் எடுத்தார்.
திருச்சி அணி சார்பில் அசத்தலாக பந்து வீசி்ய அந்தோணி தாஸ், சஞ்சய் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து, 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய திருச்சி அணி 17 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க ஆட்டக்காரர் ராஜ்குமார் அரை சதம் கடந்து 67 ரன் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். அவருக்கு ஜெகனாதன் கவுசிக் நன்கு ஒத்துழைப்பு அளித்தார். அவர் 46 ரன் எடுத்து அவுட்டானார். ஆட்ட நாயகன் விருது ராஜ்குமாருக்கு அளிக்கப்பட்டது.
இரண்டாவது போட்டியில் ஆடிய திருச்சி அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். சேலம் அணி தொடர்ந்து 2-வது தோல்வியைப் பதிவு செய்தது.