கிரிக்கெட்

முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஆப்கானிஸ்தான்-ஏ அணியை வீழ்த்தியது இலங்கை-ஏ

ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கெதிராக போட்டியில் இலங்கை ஏ 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா ஏ, இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இன்று ஆப்கானிஸ்தான்- இந்தியா ஏ அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் ஏ 245 ரன்களில் ஆல்அவுட்

இதில் முதலில் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் ஏ அணி 49.4 ஓவரில் 245 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. தொடக்க வீரர் ஹசன் ஈசாஹில் 46 ரன்கள் சேர்த்தார். பஹிர் ஷா 44 ரன்களும், ஃபர்மனுல்லா 35 ரன்களும், முகமது இஷாக் 30 ரன்களும் சேர்த்தனர். இலங்கை ஏ அணி சார்பில் சமிகா குணசேகரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை ஏ அணி களம் இறங்கியது. மழை குறுக்கீடு செய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 41 ஓவரில் 231 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அவிஷ்கா பெர்னாண்டோ சதம்

இலங்கை ஏ அணியின் நிரோஷன் டிக்வெல்லா, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டிக்வெல்லா 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹலம்பகே 4 ரன்களில் ஏமாற்றம் அடைந்தார்.

பின்னர் 3-வது விக்கெட்டுக்கு அபிஷ்கா பெர்னாண்டோ உடன் சதீரா சமரவிக்ரமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் ஆட்டமிழக்காமல் பெர்னாண்டோ 108 ரன்களும் சமரவிக்ரமா 60 ரன்களும் அடிக்க 28.1 ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

தற்போது மூன்று அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன.