கிரிக்கெட்

முத்தரப்பு ஒருநாள் தொடர்: வங்கதேசத்தை பந்தாடிய ஜிம்பாப்வே.. 99 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

ஜிம்பாப்வேயின் பிராட் எவன்ஸ் 45 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார்.

முத்தரப்பு ஒருநாள் தொடரில் வங்கதேசத்தை 99 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

இதில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே அணிகள் தலா ஒரு முறை மோதுகின்றன. முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கி நடைபெற்றது. இதில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகள் மோதின.

ஜிம்பாப்வே

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது.

3 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்து ஜிம்பாப்வே அணி தத்தளித்தது. 4வது விக்கெட்டுக்கு கிரெய்க் எர்வின் - பிரெண்டன் டெய்லர் ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

இந்த ஜோடி 150 ரன்கள் சேர்த்த நிலையில் பிரெண்டன் டெய்லர் 81 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எர்வின் 93 ரன்னில் ஆட்டமிழந்தார்.

வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது 3 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம், சயீப் ஹாசன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது

வங்கதேசம்

வங்கதேசத்திற்கு பவுலிங்கில் டப் கொடுத்த ஜிம்பாப்வே வங்கதேச அணியை 172 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்து 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்கதேசதின் தன்சித் ஹாசன் அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்தார். சைப் ஹாசன் 26 ரன்களும் ரிஷப் ஹொசைன் 23 ரன்களும் எடுத்தனர். ஏனையோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

ஜிம்பாப்வேயின் பிராட் எவன்ஸ் 45 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டார்.

வெலிங்டன் மசகட்சா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி, வங்கதேசம் வெற்றி இலக்கைத் துரத்தும் முயற்சியை முறியடித்தார்.

SCROLL FOR NEXT