நாளை நடைபெற உள்ள துலீப் டிராபி இறுதிப்போட்டியில் தெற்கு மண்டல அணியும், கிழக்கு மண்டல அணியும் மோத உள்ளன.
இந்தியாவில் நடைபெறும் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் முக்கியமானது துலீப் டிராபி போட்டியாகும்.
இதன் முதல் சீசன் 1961-1962-ல் நடைபெற்றது. தற்போது 63-வது சீசன் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. 10-ம் தேதி வரை 5 நாட்கள் இந்தப் போட்டி நடக்கிறது. இதில் தெற்கு மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகள் மோத உள்ளன.
தமிழ்நாடு, ஆந்திரா, ஐதராபாத், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி, கோவா ஆகிய அணிகளின் வீரர்களைக் கொண்டது தெற்கு மண்டலம்.
இந்த அணிக்கு திலக் வர்மா கேப்டனாக இருக்கிறார். அவர் ஒரு சதமும், ஒரு அரை சதமும் அடித்து நல்ல பார்மில் உள்ளார். சென்னையைச் சேர்ந்த என்.ஜெகதீசன் விக்கெட் கீப்பராக உள்ளார். தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ் போன்ற இந்திய வீரர்கள் தெற்கு மண்டல அணிக்காக விளையாடுகிறார்கள்.
தெற்கு மண்டலம் 13 முறை துலீப் டிராபியை வென்றுள்ளது. 14-வது தடவையாக சாம்பியன் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் இருக்கிறது. அந்த அணி அரையிறுதியில் வடக்கு மண்டலத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
கிழக்கு மண்டல அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக இருக்கிறார். வைபவ் சூர்யவன்ஷி, முகமது ஷமி, முகேஷ் குமார் போன்ற சிறந்த வீரர்களும் அந்த அணியில் இருக்கிறார்கள்.
கிழக்கு மண்டலம் அரையிறுதியில் மத்திய மண்டலத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது. கிழக்கு மண்டலம் 2 தடவை துலீப் டிராபியை வென்றுள்ளது. 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் வேட்கையில் உள்ளது.
அசாம், பீகார், பெங்கால், ஜார்க்கண்ட், ஒடிசா, திரிபுரா ஆகிய மாநில வீரர்களைக் கொண்டது கிழக்கு மண்டலம்.
நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியை ரசிகர்கள் இலவசமாகப் பார்க்கலாம். காலை 9 மணிக்கு கேட் 4 வழியாக ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஓர் அரிய வகை வாய்ப்பாகக் கருதப்படுகிறது.