10-ஆவது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த இரண்டாவது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியை ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இத்தொடரில் இன்று நடைபெற்ற 10-ஆவது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் தொடங்கிய நெல்லைய ராயல் கிங்ஸ் அணிக்கு சந்தோஷ் குமார் மற்றும் அதிஷ் எஸ்.ஆர். நல்ல தொடக்கம் கொடுத்தனர். சந்தோஷ் குமார் 19 பந்துகளில் 43 ரன்களும், அதிஷ் 14 பந்துகளில் 22 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய குருசாமி அஜிதேஷ் 28 பந்துகளில் 35 ரன்களும், முகிலேஷ் 26 பந்துகளில் 46 ரன்களை எடுத்தனர்.
கடைசியில் ரிதிக் ஈஸ்வரன் 11 பந்துகளில் 20 ரன்களும், கேப்டன் சோனு யாதவ் 12 பந்துகளில் 23 ரன்களும் எடுத்தனர். இதனால் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் சார்பில் ரகுபதி சிலம்பரசன் 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், இசக்கமுத்து மற்றும் மதிவண்ணன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
கடின இலக்கை துரத்திய ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய அமித் சாத்விக் மற்றும் துஷர் ரஹேஜா சிறப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அமித் சாத்விக் 31 பந்துகளில் 76 ரன்களை (3 பவுண்டரிகள், 8 சிக்சர்கள்) எடுத்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் சாய் கிஷோர் சிறப்பாக ஆடி 23 பந்துகளில் 32 ரன்களை குவித்தார். இறுதியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்களை குவித்தது. துஷார் ரஹேஜா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 90 ரன்களை (6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) குவித்தார். இதன் மூலம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.