10-ஆவது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 13-ஆவது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, கோவை கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்தது.
கோவை கிங்ஸ் அணி தொடக்க வீரராக களமிறங்கிய அபினவ் கண்ணன் 5 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய சுரேஷ் லோகேஷ்வர் 12 பந்துகளில் 22 ரன்களையும், இவருடன் ஆடிய பாலசுப்ரமணியம் சச்சின் 20 பந்துகளுக்கு 30 ரன்களையும் அடித்தார்.
அடுத்து களமிறங்கியவர்களில் ஆன்ட்ரே சித்தார்த் 23 பந்துகளில் 36 ரன்களும், மான் பாஃப்னா 20 ரன்களும், ஆர்.எஸ். ஆம்ப்ரிஷ் மற்றும் மனவ் பராக் தலா 10 ரன்களும், கேப்டன் ஷாருக் கான் 18 ரன்களும் எடுத்தனர். இதனால் கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்களை மட்டுமே எடுத்தது.
திருப்பூர் தமிழன்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய நடராஜன் மற்றும் ரகுபதி சிலம்பரசன் தலா 2 விக்கெட்டுகளையும், எசக்கிமுத்து, சாய் கிஷோர் மற்றும் மோகன் பிரசாத் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
எளிய இலக்கை துரத்திய திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய அமித் சாத்விக் 29 பந்துகளில் 66 ரன்கள் (5 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார். அடுத்து வந்தவர்களில் மதிவாணன் அதிகபட்சமாக 26 பந்துகளில் 34 ரன்களும், முகமது அலி 29 ரன்களும் எடுத்தனர்.
ஒரு பக்கம் தொடக்க வீரரான அமித் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மறுப்பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே வந்தது. இதனால் திருப்பூர் தமிழன்ஸ் அணி 18 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றது.