கிரிக்கெட்

திண்டுக்கல் அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திருச்சி கிராண்ட் சோலாஸ்

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

10-ஆவது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இன்றைய போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 22-ஆவது ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

கடின இலக்கு:

திருச்சி கிராண்ட் சோலாஸ் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ராஜ்குமார் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 71 ரன்கள் (9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் களமிறங்கிய கேப்டன் சுரேஷ் குமார் 41 பந்துகளில் 60 ரன்கள் (7 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) விளாசினார்.

அடுத்து களமிறங்கிய சஞ்சய் யாதவ் தன் பங்கிற்கு 20 பந்துகளில் 33 ரன்களை (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார். இவருடன் ஆடிய ஜாஃபர் ஜமால் 9 பந்துகளில் 21 ரன்கள் (3 சிக்சர்கள்) எடுத்தார்.

இதன் காரணமாக திருச்சி அணி 19 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 197 ரன்களை எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் விஜூ அருள் 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வரன் 1 விக்கெட் கைப்பற்றினர்.

தடுமாறிய திண்டுக்கல் டிராகன்ஸ்:

சற்றே கடின இலக்கை துரத்திய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு ஷிவம் சிங் நல்ல தொடுக்கத்தை கொடுத்தார். இவர் 28 பந்துகளில் 47 ரன்கள் (8 பவுண்டரிகள்) விளாசினார். இவருடன் களமிறங்கிய வி.கே. வினீத் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபா இந்திரஜித் 22 பந்துகளில் 32 ரன்கள் (4 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்தார்.

பின்னர் வந்தவர்களில் ஆர்.கே. ஜெயந்த் கடைசி வரை போராடினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆர்.கே. ஜெயந்த் 27 பந்துகளில் 34 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 170 ரன்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஈஸ்வரன் 4 விக்கெட்டுகளையும், அந்தோனி தாஸ் 3 விக்கெட்டுகளையும், அதிசயராஜ் டேவிட்சன் 1 விக்கெட் கைப்பற்றினார்.