10-ஆவது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 21-ஆவது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்ஸீஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
சேப்பாக் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கிய மோகித் ஹரிஹரன் 13 ரன்களும், கேப்டன் நாராயன் ஜெகதீசன் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஆஷிக் ரன் ஏதும் எடுக்காமல் டக் ஆகி வெளியேறினார்.
பின்னர் களமிறங்கிய ராம் அரவிந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய ஸ்வப்நில் சிங் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து களமிறங்கியவர்களில் தினேஷ் ராஜ் மட்டும் 18 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார். ராம் அரவிந்த் தன் பங்கிற்கு 32 பந்துகளில் 63 ரன்களை விளாசினார்.
கடைசியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கோவை கிங்ஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஆர்.எஸ். ஆம்ப்ரிஷ் 3 விக்கெட்டுகளையும், மணிமாறன் சித்தார்த் 2 விக்கெட்டுகளையும், திவாகர், கிஷூர் மற்றும் ஜதாவேத் சுப்ரமணியன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
சற்றே எளிய இலக்கை துரத்திய கோவை கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்களான ராதாகிருஷ்ணன் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் முறையே 38 மற்றும் 40 ரன்களை எடுத்தனர்.
அடுத்து களமிறங்கிய பாலசுப்ரமணியனம் சச்சின் 37 ரன்களை எடுத்தார். கேப்டன் ஷாருக் கான் 11 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார்.
இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதன் மூலம் கோவை கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.