டி.என்.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு கோவை கிங்ஸ் அணி முன்னேறியது.
8 அணிகள் பங்கேற்ற 10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதனை தொடர்ந்து தொடரின் தற்போதைய இறுதிக்கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள டி.என்.பி.எல். தொடரில், புள்ளிகள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. இதில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது தகுதி சுற்று போட்டியில் மதுரை மற்றும் திருச்சி அணிகள் மோதின. இந்தப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் மதுரை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று இரவு எலிமினேட்டர் சுற்று போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் தமிழன்ஸ் அணி 3 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 15 ரன்களை எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனால் ஆட்டம் தடைப்பட்டது. இதனை தொடர்ந்து போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தொடர் மழையால் காரணமாக ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எலிமினேட்டர் சுற்று போட்டியும் கைவிடப்பட்டதால், புள்ளிகள் பட்டியல் அடிப்படையில் கோவை கிங்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்று போட்டிக்கு முன்னேறியது.
இரண்டாவது தகுதி சுற்றுப் போட்டியில், கோவை கிங்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி நாளை (ஆகஸ்ட் 26) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஆகஸ்ட் 28-ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணியை எதிர்கொள்ளும்.