கிரிக்கெட்

டிஎன்பிஎல்: ஹரி ராகவேந்திரா போராட்டம் வீண்... மதுரை அணியை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சேப்பார் சூப்பர் கில்லீஸ் அணிக்கு மோகித் ஹரிஹரன் சதம் விளாசினார்.

10-ஆவது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற 19-ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்ஸீஸ் மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மதுரை பேந்தர்ஸ் அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

அபார தொடக்கம்:

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய மோகித் ஹரிஹரன் மற்றும் கேப்டன் நாராயன் ஜெகதீசன் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இவர்களில் மோகித் 50 பந்துகளில் 108 ரன்கள் (4 பவுண்டரிகள், 10 சிக்சர்கள்) விளாசினார். இவருடன் ஆடிய கேப்டன் ஜெகதீசன் 48 பந்துகளில் 79 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.

அடுத்து களமிறங்கிய ஸ்வப்நில் சிங் 21 பந்துகளில் 42 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) விளாசினார். இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 240 ரன்களை குவித்தது. மதுரை சார்பில் கணேசன் பெரியசாமி மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மதுரை சொதப்பல்:

கடின இலக்கை துரத்திய மதுரை பேந்தர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களில் ஒருவராக களமிறங்கிய சித்தார்த் மகாதேவன் வெறும் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பாலாசந்தர் அஷ்வின் மற்றும் தீபேஷ் தேவேந்திரன் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் தங்களது விக்கெட்டை பறிக்கொடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய ஹரி ராகவேந்திரா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடக்க வீரராக களமிறங்கிய ராம் குமார் 12 பந்துகளில் 28 ரன்கள் (2 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) எடுத்த போது தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், மறுப்பக்கம் ஹரி ராகவேந்திரா அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

போட்டி முடிவில் மதுரை பேந்தர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 201 ரன்களை எடுத்தது. இதன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மதுரை அணிக்கு அதிகபட்சமாக ஹரி ராகவேந்திரா 55 பந்துகளில் 98 ரன்கள் (9 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) விளாசினார்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஸ்வப்நில் சிங் மற்றும் பிரேம் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், அபிஷேக் தன்வார், விக்னேஷ் மற்றும் லோகேஷ் ராஜ் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.