10-ஆவது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இத்தொடரில் இன்று நடைபெற்ற 9-ஆவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த கோவை வீரர்கள் சேப்பாக் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
தொடக்க வீரராக களமிறங்கிய அனுராக் ராஜேஷ் நாயர் ரன் ஏதும் எடுக்காமல் தனது விக்கெட்டை பறிக்கொடுக்க, இவருடன் களமிறங்கிய ஷிவம் சிங் 16 பந்துகளில் 25 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஆர்.கே. ஜெயந்த் 11 ரன்களும், எம் கார்த்திக் சரண் 4 ரன்களுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து வந்தவர்களில் விமல் குமார் (21 ரன்கள்), பாபா இந்திரஜித் (21 ரன்கள்), மோகித் மித்தன் (20 ரன்கள்) எடுத்தனர். இறுதியில் திண்டுக்கல் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷிவம் சிங் அதிகபட்சமாக 25 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்து வீசிய சேப்பாக் அணியின் அபிஷேக், அஸ்வந்த் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
127 எனும் எளிய ரன்களை துரத்திய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு துவக்க வீரரான வசீம் அகமது 3 ரன்களுக்கும், இவரைத் தொடர்ந்து களமிறங்கிய கே ஆஷிக் 1 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். எனினும், தொடக்கத்தில் களமிறங்கிய நாராயன் ஜெகதீசன் அபாரமாக ஆடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். இர் 58 பந்துகளில் 90 ரன்களை (8 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்) குவித்தார்.
பின்னர் களமிறங்கிய தினேஷ் ராஜ் 16 ரன்களும், மோகித் ஹரிஹரன் 13 ரன்களும் எடுக்க சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 16.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.