டிஎன்பிஎல் 
கிரிக்கெட்

TNPL: நெல்லையை வீழ்த்தி மதுரை வெற்றி

5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் நெல்லை கிங்ஸை மதுரை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டிஎன்பிஎல்

டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-ம் கட்ட ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடி யத்தில் நடைபெற்று வருகின்றன.

இன்று நடைபெற்ற 28 வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த மதுரை பேந்தர்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.

199 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய நெல்லை ராயல் கிங்ஸ் மதுரை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 126 ரன்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் மதுரை அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலிடம்

மதுரை அணியின் ஒட்டுமொத்த ரன் ரேட்டும் இப்போட்டி மூலம் கணிசமாக உயர்ந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மதுரை அணி லீக் சுற்றில் 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகளை பெற்றுள்ளது.

முன்னதாக மதுரை பேந்தர்ஸ் அணி, திருச்சி கிராண்ட் சோழாஸ், கோவை கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்தியிருந்தது.

சென்னை சூப்பர் கில்லீஸ் மற்றும் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளிடம் மட்டுமே தோல்வியடைந்திருந்தது.

தற்போதைய வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 5 வெற்றிகளுடன் மதுரை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

சேலம் அணி ஆறுதல் வெற்றி

முன்னதாக நேற்று மதியம் திருப்பூருக்கு எதிரான போட்டியில் 45 ரன் வித்தியாசத்தில் வென்ற சேலம் அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற சேலம் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கார்த்திக் மணிகண்டன் அரை சதமடித்தார். அவர் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பூபதிகுமார் 27 ரன்னிலும், அபிஷேக் 29 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

திருப்பூர் அணி சார்பில் மதிவண்ணன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரரான துஷார் ரஹேஜா மட்டும் அதிரடியாக ஆடினார். அவர் 43 பந்துகளில் 5 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 75 ரன்கள் குவித்தார்.

அமித் சாத்விக், முகமது அலி ஆகியோர் இரட்டை இலக்கங்களை எட்டினர். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், திருப்பூர் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சேலம் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சேலம் சார்பில் ரஹில் ஷா 3 விக்கெட்டும், பொய்யாமொழி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய சேலம் ஒரு வெற்றி, 6 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

திருப்பூர் அணி தான் ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.